Published : 05 May 2023 02:54 PM
Last Updated : 05 May 2023 02:54 PM

கலாஷேத்ரா உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

ஹரிபத்மன் | கோப்புப்படம்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் வழக்கில், உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி ஒருவர், அடையார் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கல்லூரியின் நடனத் துறை உதவிப் பேராசிரியரான ஹரிபத்மனை ஏப்.3-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், ஹரிபத்மன் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹரிபத்மன் தரப்பில், “தனது வளர்ச்சியைப் பிடிக்காத சக ஆசிரியர்கள், மாணவிகளைத் தூண்டி விட்டு ஹரி பத்மனுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர். 2019ம் ஆண்டு சம்பவம் நடந்ததாகக்கூறி, 4 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக, 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது காவல் துறை தரப்பில், "வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியுள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்.

தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவை மாற்றியமைக்க கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது" என்று விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "ஹரிபத்மனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற ஹரிபத்மன் தரப்பு கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

மனு தள்ளுபடி: இந்நிலையில், பட்டியலில் உள்ள வழக்குகள் விசாரணை முடிந்த பின், ஹரிபத்மன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு முறையிடப்பட்டது. அப்போது, ஏற்கனவே 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால்தான் அவசரமாக ஜாமின் கோரி மனு தாககல் செய்ததாகவும், ஆனால் வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதால் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x