Published : 05 May 2023 05:21 AM
Last Updated : 05 May 2023 05:21 AM

காலை உணவு திட்ட விரிவாக்கப் பணிகள் - அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை' கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில், ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், காலையில் உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 30,122 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், திட்டத்துக்கான வழிமுறைகளும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டன.

அதில், திட்டத்தின் பணிகளைக் கண்காணிக்க, வட்டார வளமைய அளவில் ஒரு ஆசிரியப் பயிற்றுநரை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து, மாவட்டம் வாரியாக திட்டத்தின் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் க.இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கப் பணிகள், தேவையான உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் தொடர்பாக விவா திக்கப்பட்டன.

மேலும், இந்த திட்டத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை துரிதமாக முடித்து, ஜூன் மாதத்தில் காலை உணவுத் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x