Published : 05 May 2023 06:10 AM
Last Updated : 05 May 2023 06:10 AM

தமிழகத்தில் அனுமதியில்லாத விளம்பர பலகைகளை அகற்றவே புதிய சட்டதிருத்தம் - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை முற்றிலும் அகற்றுவதற்காகவே புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளைப் பொறுத்தவரை, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் மற்றும் வரி விதிகள், சென்னை மாநகராட்சி விளம்பரப் பலகைகள் உரிமம் மற்றும் விதிகள்படி, கடந்த அதிமுக ஆட்சியில் விளம்பரப் பலகைகள் அமைக்க அனுமதி வழங் கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அனுமதியின்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், 2018-ல் அதிமுக ஆட்சியில் பல்வேறு நகர்ப்புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் வைக்க ஏதுவாக சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சில நிறுவனங்கள் ஏகபோக உரிமை: இதனால் சில நிறுவனங்கள் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளின் நிலம் மற்றும் கட்டிடங்களில் விளம்பரங்கள் செய்யும் ஏகபோக உரிமையைப் பெறும் சூழல் உருவானது.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து சில விளம்பர நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவ்வழக்கில், சட்டத்திருத்தத்துக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம், புதிய விதிகளைஉருவாக்குமாறு அதிமுக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அதிமுக, ஆட்சியில் இருந்தவரை, உயர் நீதிமன்ற உத்தரவை கிடப்பில் போட்டிருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர்,உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு, கடந்த ஏப். 13-ம் தேதி முதல் திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படை நோக்கம், அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அறவேஅனுமதிக்கக்கூடாது என்பதுதான். சட்டத்துக்கு முரணாக வைக்கப்படும் விளம்பரப்பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கும் உரிமைதாரர்கள் மற்றும்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப் படுகிறது.

500-க்கும் மேற்பட்ட பலகைகள் அகற்றம்: கடந்த 6 மாதங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டவிளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், 697 விளம்பரப் பலகைகள் நீதிமன்றத் தடையால் அகற்ற இயலாத சூழலில் உள்ளன. எனினும், அவற்றையும் அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன.

ஆகவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை அடியோடுஅகற்றுவதே திமுக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x