Published : 05 May 2023 06:21 AM
Last Updated : 05 May 2023 06:21 AM
சென்னை: ‘திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தம்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பேரவைத் தலைவர் அப்பாவு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓர் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘திராவிட மாடல் நிர்வாகம் என்பது ஓர் அரசியல் முழக்கம் மட்டுமே. திராவிட மாடல் என்ற காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்’’ என்று விமர்சித்திருந்தார்.
அதேபோல, 2021-ல் அனுப்பப்பட்ட 19 மசோதாக்களில், 18-க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன். நீட் தொடர்பான மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. 2022-ல் பெறப்பட்ட மசோதாக்களில் 48-ஐ அனுப்பிவிட்டேன். மீதமுள்ள 3 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மசோதாவை அரசு திரும்பப் பெற்றுவிட்டது. 8 மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் 7 மசோதாக்கள் வந்தன. அவை அனைத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் தற்போது எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழகத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தை எப்படி அமைதிப்பூங்கா என்று கூறுவது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். பேரவையிலிருந்து வெளியேறிய விவகாரம், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், ஆளுநர் விருப்புரிமை நிதி முறைகேடு புகார், தமிழகத்தில் கல்வியின் தரம் தொடர்பாகவும் விமர்சித்துள்ள ஆளுநர், தமிழக காவல் துறையில் அரசியல் புகுந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், திமுகவினர் மீதான சொத்துப் பட்டியல் புகார் தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:
பேரவைத் தலைவர் அப்பாவு: தமிழகத்தில் நடைபெறும் திராவிடமாடல் ஆட்சி, நாட்டுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மக்கள் விரும்புவது திராவிட மாடல் ஆட்சியைத்தான். சமூக நீதி ஆட்சியாக இந்த ஆட்சி நடக்கிறது. இது சிலருக்கு பிடிக்காதுதான்.
அமைச்சர் மனோ தங்கராஜ்: திராவிட மாடலை காலாவதியாக்க வேண்டும் என்பதே ஆளுநரின் திட்டம். திராவிட மாடல் என்பது எங்கள் இனத்தின் குறியீடு. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவதே திராவிட மாடல். ஆளுநர்கள் அரசியல் பேசக் கூடாது. அனைவரும் சமம் என்பதே திராவிடத்தின் கொள்கை. சனாதனம் பேசுவோர், சாதியக் கோட்பாடுகளை ஏற்பவர்களுக்கு இது புரியாது.
திமுக எம்.பி. வில்சன்: அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பணிகள், பொறுப்புகளை ஆளுநர் ரவி மறந்துவிட்டார்.மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆளுநர் மாளிகைக்கு செலவிடும் நிதியை, மக்களுக்குச் செலவிடலாம். திராவிட மாடலை காலாவதியான கொள்கைஎன்று ஆளுநர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. முதலில், அவர்தனது கடமைகள்,பொறுப்புகளை சரிவர நிறைவேற்றினாரா என்பதை சிந்திக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார்.
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே திராவிட மாடல். இது எப்படிநீர்த்துப்போகும்? ஒரே நாடு என்றால் சோழர்கள், பாண்டியர்களுக்குள் ஏன் போர் வர வேண்டும்? ஒரே நாடாக இல்லாத காரணத்தால்தான் மன்னர் மானியம் என்ற திட்டமே வந்தது. எவ்வித வரலாற்று அறி வும், புரிதலும் இல்லாத மனிதர் நமது ஆளுநர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT