Published : 08 Sep 2017 08:01 AM
Last Updated : 08 Sep 2017 08:01 AM

குடிபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்ததை பொறுக்க முடியாமல் பெற்ற மகனை கொன்று சிறைக்கு சென்ற தாய்: யார் மீது தவறு... தாய் மீதா? தமிழக அரசு மீதா?

தா

யிற் சிறந்த கோயில் இல்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரில் முதலில் நிற்கிறாள் தாய். தன்னிகரற்ற தாய்ப் பாசம் மனிதனுக்கு மட்டுமின்றி மொத்த உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அத்தகைய தாயே தனது மொத்த குடும்பத்தையும் மதுபோதையில் சித்ரவதை செய்த மகனின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக சாகடித்திருக்கிறார்.

சென்னை திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் செந்தில், மருமகள் காமாட்சி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள். மூவரும் அருகே உள்ள கோலடி அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். மது போதைக்கு அடிமையான செந்தில் கடந்த 16 ஆண்டுகளாக மொத்தக் குடும்பத்தினரையும் சித்ரவதை செய்துவந்தார். மனைவிக்கு அரிவாள் வெட்டு, தாய்க்கு உருட்டுக் கட்டை தாக்குதல், குழந்தைகளைத் தூக்கிப் போட்டு பந்தாடுவது என தினம் தினம் செந்திலால் அந்தக் குடும்பம் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஆவேசமும்.. பாசமும்..

மகனால் தனது மருமகளும், குழந்தைகளும் படும் சித்ரவதைகளைச் சகிக்கமுடியாத சரஸ்வதி, 2 நாட்களுக்கு முன்பு, போதையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார். இறந்துபோன மகனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கதறி அழுதவர், பின்னர் திருவேற்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போதையின் பிடியில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் மொத்த நிலையையும் தனது ஒற்றைச் செயலால் உணர வைத்திருக்கிறார் அந்தத் தாய். ‘மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம்’ என்று சொல்லிக்கொண்டே, சில நாட்களுக்கு முன்பு சத்தமின்றி 1,000 மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசு மீது மகனின் ரத்தக்கறையைப் பூசிவிட்டு சென்றிருக்கிறார் அந்தத் தாய். இப்போது அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது.

இங்கே குற்றவாளி யார்? கொலை செய்த தாயா? மதுபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்த மகனா? இல்லை, வீதிதோறும் மதுக்கடைகளை திறந்துவைத்திருக்கும் தமிழக அரசா?

பல ஆண்டுகளாக சித்ரவதை செய்த கணவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். குடும்பத்துக்கு ஆதரவாக இருந்த மாமியார் சிறைக்குச் சென்றுவிட்டார். குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், செய்வதறியாது பரிதவிக்கும் காமாட்சியை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம். கணவனை இழந்த அவர், தொடர்ந்து நடக்கவுள்ள சடங்குகளுக்காக கைநிறைய கண்ணாடி வளையல்களும், கண்களில் முட்டி நிற்கும் கண்ணீருமாக நின்றிருந்தார்.

16 ஆண்டுகளாக சித்ரவதை

“சொந்த ஊரு அனகாபுத்தூரு அண்ணே, நானும் செந்திலும் சின்ன வயசுலயே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 16 வருஷமாச்சு. இத்தனை வருஷத்துல நானும், மாமியாரும், குழந்தைகளும் பட்ட சித்ரவதை கொஞ்ச நஞ்சமில்லை. கல்யாணமான புதுசுல ராத்திரி மட்டும் குடிச்சிட்டு இருந்தாரு. அப்புறம் பகல்லயும் குடிக்க ஆரம்பிச்சிடுச்சு.

நாலைஞ்சு வருஷமா அதுக்கு காலையில எழுந்திருச்ச உடனேயே ஆஃப் பாட்டில் பிராந்தி வேணும். நைட்டே குழந்தைங்க போயி வாங்கிட்டு வந்து வெச்சிடணும். இல்லைன்னா விடியற்காலை குழந்தைகளை அடி பின்னிடுவாரு. அப்புறம் நாள்பூரா அழிச்சாட்டியம்தான். பக்கத்துல செக்யூரிட்டி வேலை வாங்கிக் கொடுத்தேன். வேலைக்கு சரியா போறதில்ல.

நான் அண்ணா நகர்ல இருக்குற ஒரு ஹோட்டல்ல வேலை பாக்குறேன். பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல மாமியார் பாத்திரம் கழுவுறாங்க. எங்க சொற்ப வருமானத்தை வெச்சுத்தான் மூணு குழந்தைகளையும் காப்பாத்துறேன். இதுல தினமும் புருஷனுக்கு குடிக்கவும் பணம் தரணும். சரி குடிச்சுத் தொலையட்டும், பிறகாவது அமைதியா இருக்கலாம்ல.. அதுவும் கிடையாது. கோவம் வந்திச்சின்னா, அரிவாளை எடுத்து என்னை வெட்டிடுவாரு. உடம்பெல்லாம் அரிவாள் வெட்டு. அவங்க அம்மாவை உருட்டுக் கட்டையால பலமுறை மண்டையை உடைச்சிருக்காரு. பசங்களை தெருவுல ஓட விட்டு அடிப்பாரு. போலீஸ் ஸ்டேஷன்ல பலமுறை புகார் கொடுத்தோம். மகளிர் போலீஸம்மா, ‘கண்ணு நீ ஸ்ட்ராங்கா ஒரு கேஸ் கொடு, பத்து வருஷம் உட்கார வெச்சிடுறேன்’னாங்க. மனசு கேட்கலை.

அடியாச்சும் வாங்கிக்கலாம். ஆனா, அது கேட்குற வார்த்தை ஒவ்வொண்ணும் செத்துடலாம்போல இருக்கும். தெனமும் வேலைக்குப் போயிட்டு நானும் அத்தையும் வருவோம். ரெண்டு பேரையும் வாய்கூசாம அசிங்க அசிங்கமா பேசுவாரு. மூணு நாளு முன்னாடி இவர் பண்ண அழிச்சாட்டியம் தாங்க முடியாம அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். திங்கள்கிழமை காலையில போன் வருது.. வந்து பார்த்தா, முகமெல்லாம் ரத்தக்கறையோட அத்தை உட்கார்ந்திருந்தாங்க.

“தங்கம், உனக்கு தாலி எடுத்துக் கொடுத்த கையாலேயே உன் தாலியைப் பறிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடும்மா. அவன் இருந்தா உங்களை உசுரோட விடமாட்டான்”னு என் காலில் விழுந்து கதறினாங்க. கையில் இருந்த ஏழாயிரம் ரூவாயையும், கம்மலையும் கழட்டிக் கொடுத்துட்டு, ‘எப்படியாச்சும் பொழைச்சுக்கோ’ன்னு சொல்லிட்டு, அழுதுகிட்டே போலீஸ்கூட போயிட்டாங்க. எனக்கு அம்மா இல்லை. விவரம் தெரியாத வயசுலேயே இறந்துட்டாங்க. அத்தைதான் அம்மாவா இருந்து பார்த்துக்கிட்டாங்க. அவங்களும் ஜெயிலுக்கு போயிட்டாங்க. இனி எனக்கு யாரு இருக்கா...?” கதறி அழுகிறார் காமாட்சி.

இதில் தவறு யார் மீது? மகனைக் கொன்ற தாய் மீதா? குடிநோயாளி மீதா? தெளியாத மதுக் கொள்கையுடன் செயல்படும் தமிழக அரசு மீதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x