Published : 04 May 2023 08:33 PM
Last Updated : 04 May 2023 08:33 PM
புதுடெல்லி: நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. மேலும், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனது நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கறிஞர் ராம்சங்கர் என்பவர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு கடந்தாண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? அப்படி செயல்படுகிறது என்றால் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது? ஏன் இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவில்லை? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
மேலும், தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கு விசாரணை குறித்து அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இரு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நிலப் பிரச்சினைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது. மேலும், தமிழகத்தில் நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்
குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்று தமிழகத்திலும் நில அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT