Published : 04 May 2023 07:58 PM
Last Updated : 04 May 2023 07:58 PM
சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அவர், தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார். எனவே அவர்மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த மனு குறித்து மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், புகார்தாரர் மிலானி, தனது தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. எனது வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல. ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் "மே 26ம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது எடப்பட்டி பழனிசாமி தரப்பில், "இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டபிறகு, அவசர கதியில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை தரப்பு விளக்கத்தை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...