Published : 17 Jul 2014 09:15 AM
Last Updated : 17 Jul 2014 09:15 AM
94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி குழந்தைகளை இழந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்தப் பள்ளியின் முன் புதன்கிழமை கூடி அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் மிகச் சிறிய கட்டிடத்தில் ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தன. இதில் 740-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.
2004, ஜூலை 16-ல் இந்தப் பள்ளியின் கீற்றுக் கொட்டகைகள் தீப்பற்றி எரிந்த விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலியாயினர். 18 குழந்தைகள் தீக்காயமடைந்தனர்.
இவ்விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாளான புதன்கிழமை, விபத்து நடந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் மற்றும் இப்பள்ளியில் படித்து உயிர் தப்பிய குழந்தைகள் காலை 9 மணியளவில் ஒன்று கூடினர். பள்ளி வாயிலின் மேல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற வாசகத்தை தாங்கிய பதாகையின் எதிரில் அமர்ந்து கண்ணீர்விட்டுக் கதறியழுதும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி ஆட்சியர் கோவிந்தராம், கோ.சி.மணி (திமுக), ராம.ராமநாதன் (அதிமுக), ராம்குமார் (காங்கிரஸ்), கும்பகோணம் நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் தமிழழகன், சி.சங்கர் தலைமையில் வழக்கறிஞர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், குழந்தைகள் தீயில் கருகிய பிஞ்சு குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்ற பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர், பாலக்கரையில் உள்ள குழந்தைகளின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாலையில், விபத்து நடந்த பள்ளியிலிருந்து ஊர்வலமாகச் சென்று குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய மகாமகக் குளத்தில் அகல் விளக்குகளை மிதக்க விட்டனர்.
“இந்த விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைக்கும் உயிரிழந்த பிள்ளைகளின் சகோதர - சகோதரிகளும் கூடப் படித்த பிள்ளைகளும் விடுமுறை இல்லாததால் இங்கு வரமுடியவில்லை. குழந்தைகள் இந்த இடத்தை பார்த்தால்தான், பள்ளிகளில் தங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வந்து அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்” என்கிறார் தனது மகள் கார்த்திகாவை பறிகொடுத்த சூரியகுமாரி என்கிற தாய்.
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க வேண்டும்
“எங்கள் குழந்தைகளின் உயிர் பலியால்தான், இப்போது நாடு முழுவதும் பள்ளிக் கூடங்களின் அவல நிலை வெளியே தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர்தான் பள்ளிகளின் பாதுகாப்பும், சுகாதார நிலையும் மேம்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளின் தியாகத்தால்தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை உலகமும், அடுத்த தலைமுறையினரும் அறியும் வகையில் இந்த நாளை (ஜூலை 16) சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக நீண்டு வரும் இவ்வழக்கை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்கிறார் தனது மகன்கள் ஆனந்தராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரை இழந்த இன்பராஜ் என்கிற தந்தை.
வழக்கும்... தீர்ப்பும்...
உலகையே உறைய வைத்த இந்த தீ விபத்து வழக்கில், பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமி உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேர்களை தமிழக அரசு வழக்கிலிருந்து பின்னர் விடுவித்தது. இதற்கிடையே கும்பகோணத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் 10-வது எதிரியான மாவட்டக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன், தன்னையும் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என 2012-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 6 மாத காலத்துக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தஞ்சை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த மாதம் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT