Published : 04 May 2023 11:40 AM
Last Updated : 04 May 2023 11:40 AM
சென்னை: செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக வளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி இயந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க இயலாத மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேண்டுமென்றால் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் பேசி நாடு முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வரலாமே? என்று தம்மைத்தாமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எதிர்வினா எழுப்பியிருக்கிறார். அவரது அறியாமையை எண்ணி நான் வருத்தமடைகிறேன்.
ஆக்கப்பூர்வமாக செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும் நிலையில், அவற்றையெல்லாம் விட்டு விட்டு, சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிகவளாகம் ஒன்றின் எலைட் டாஸ்மாக் மதுக்கடையில் அமைக்கப்பட்டுள்ள மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரத்தை பார்வையிட்ட தமிழக அரசின் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தானியங்கி எந்திரங்களுக்காக தமிழக அரசு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்றும், மது நிறுவனங்கள் தான் அவற்றை இலவசமாக வழங்கின; அதைத் தான் டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துகிறது என்று விளக்கமளித்திருக்கிறார். இப்படி ஒரு விளக்கத்தை அளித்ததற்காக அவர் வெட்கப்பட வேண்டும். ஆனால், இப்படி ஒரு மதுவிலக்குத்துறை அமைச்சரை பெற்றிருக்கிறோமே? என்று தமிழக மக்கள் மக்கள் தான் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
தயாரிப்பு நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அவற்றை சில்லறை விற்பனைக் கடைகள் அப்படியே பயன்படுத்துவதற்கு மது ஒன்றும் குளிர்பானம் அல்ல. குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் தானியங்கி எந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகளை சில்லறை வணிகக் கடைகளுக்கு இலவசமாக வழங்குவதும், கடைகள் அவற்றை பயன்படுத்துவதும் உண்மை தான். தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை இலவசமாக வழங்குவதன் நோக்கம் தங்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது தான். மது நிறுவனங்களுக்கும் தாங்கள் தயாரிக்கும் மதுவகைகள் அதிக அளவில் விற்பனையாக வேண்டும் என்ற நோக்கம் இருக்கலாம்; அதற்காக அவை இத்தகைய எந்திரங்களை வழங்கலாம். ஆனால், அவற்றை அப்படியே பயன்படுத்த டாஸ்மாக் ஒன்றும் செந்தில் பாலாஜி என்ற தனிநபர் நடத்தும் தனியார் நிறுவனம் அல்ல... தமிழக அரசு நிறுவனம். அதன் வணிக நடைமுறையில் செய்யப்படும் எந்த மாற்றமும் அரசின் கொள்கை முடிவாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் விவாதித்து தான் முடிவெடுக்க வேண்டும்.
அதையும் கடந்து மது நிறுவனங்கள் அவற்றின் மது வணிகத்தை அதிகரிப்பதற்காக எந்திரங்களை வழங்கி, அவற்றை டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துவதை செந்தில் பாலாஜி ஆதரிக்கிறார் என்றால், மது ஆலைகளின் லாபம் அதிகரிப்பதற்காக மது வணிகம் பெருகுவதையும் ஆதரிக்கிறார் என்று தான் பொருள். அப்படியானால் செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா... மது விற்பனைத்துறை அமைச்சரா? தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வது குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதைத் தான் மக்கள் நல அரசு மதிக்க வேண்டும். மாறாக, மது நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன என்பதற்காக தானியங்கி எந்திரங்களை பயன்படுத்த செந்தில் பாலாஜி ஒன்றும் மது ஆலைகளின் முகவர் அல்ல... தமிழகத்தின் மதுவிலக்கு அமைச்சர்.
அடுத்ததாக, ‘‘நாடாளுமன்றத்தில் பேசி தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வருவது தானே; அதை விடுத்து இங்கு வந்து அன்புமணி அரசியல் செய்கிறார்’’ என்று பொங்கி எழுந்திருக்கிறார் பெருமாளின் பெயரைக் கொண்ட அமைச்சர். அவருக்கு பிழைப்புவாத அரசியல் தெரிந்த அளவுக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை என்பதையே அவரது வாதம் காட்டுகிறது. மதுவிலக்கு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக உள்ள மாநிலப் பட்டியலில் எட்டாவதாக இடம் பெற்றுள்ளது. அதன்படி மது உற்பத்தி, வணிகம், விற்பனைத் தடை உள்ளிட்ட எந்த முடிவையும் மாநில அரசு தான் எடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசோ, நாடாளுமன்றமோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது ஏனோ எல்லாம் தெரிந்த செந்தில் பாலாஜிக்கு தெரியவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போதைக்கு இருக்கும் இயக்கம் மாநில தன்னாட்சி பேசும் இயக்கம். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்பது தான் தன்னாட்சி தத்துவத்தின் அடிநாதம் ஆகும். இப்படி அனைத்து துறைகளிலும் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, இன்னொருபுறம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருந்தும் கூட, அதை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்; நீங்கள் நாடாளுமன்றத்தில் வாதிடுங்கள் என்பது எந்த வகையான தன்னாட்சி கொள்கை? திராவிட மாடலில் இப்படித்தான் தத்துவம் வகுக்கப்பட்டிருக்கிறதா?
டாஸ்மாக் வருமானத்தை வைத்துக் கொண்டு அரசை நடத்த வேண்டிய தேவை திமுகவுக்கு இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். இது உண்மையானால், அவர் செய்திருக்க வேண்டிய வேலை மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரத்தை ஆய்வு செய்வது அல்ல... தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டியது தான். ஒருபுறம் மது வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறிக் கொண்டு, இன்னொருபுறம் 2023&24 ஆம் ஆண்டில் மது வணிகத்தின் மூலம் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிப்பது படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது.
தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது வணிகத்தின் மூலமே கிடைக்கிறது. இது ஓர் அரசின் சாதனையாக இருக்க முடியாது; வேதனையாகத் தான் இருக்க முடியும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மது வணிகம் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு தேவையில்லை என்றால், மூடுவதாக அறிவிக்கப்பட்ட 500 மதுக்கடைகளும் தமிழகத்தின் அதிக வருமானம் கொண்ட 500 மதுக்கடைகளாகத் தான் இருக்க வேண்டும். அவற்றை மூடாமல் குறைந்த வருமானம் கொண்ட மதுக்கடைகளை தேடித்தேடி பட்டியல் தயாரிப்பதில் இருந்தே உயிரைப் பறிக்கும் மது வருவாயைத் தான், தமிழக அரசு உயிராக நம்பிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மதுவிலக்குத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே செந்தில் பாலாஜி அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதில் தான் தீவிரமாக இருக்கிறார். அதற்காக அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தமிழகம் என்றாலே குடிகார நாடு என்று பிறர் தூற்றும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்று தான் அண்ணா கூறினார். ஆனால், அவர் தொடங்கிய கட்சியின் ஆட்சியில் எங்கும் மது... எதிலும் மது என்ற நிலை உருவாகி வருகிறது. அறிஞர் அண்ணா மறைந்திருந்தாலும், இந்த சீரழிவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் ஆட்சியில் தான் விளையாட்டு அரங்குகளில் தாராளமான மது வணிகம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரது டாஸ்மாக் ஆட்சியில் தான் பன்னாட்டு நிகழ்வுகளில் மது வழங்க அனுமதிக்கப்படுகிறது. இவை எல்லாம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்காகவா, அல்லது பொது சேவைக்காகவா? என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் விளக்க வேண்டும்.
ஒன்று மட்டும் உறுதி... செந்தில் பாலாஜி மட்டும் மதுவிலக்குத்துறை அமைச்சராக தொடர்ந்தால், அவரால் இன்றைய தமிழக அரசுக்கு ஏற்படும் அவப்பெயர் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நீங்காது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். 1970-களில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளில் மூன்று தலைமுறைகள் மதுவுக்கு இரையாகிவிட்டன. இனிவரும் தலைமுறைகளாவது மதுவின் சீரழிவில் இருந்து மீட்கப்பட வேண்டும். அதற்கான ஒரே தீர்வு படிப்படியாகவோ, உடனடியாகவோ தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். அவற்றில் முதல் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை அமைச்சராக்கி அவரிடம் மதுவிலக்கை ஏற்படுத்தும் பொறுப்பை முதல்வர் ஒப்படைக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...