Published : 04 May 2023 10:57 AM
Last Updated : 04 May 2023 10:57 AM
சென்னை: 12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதாக பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்.12-ம் தேதி தாக்கல் செய்தார். பேரவைக் கூட்ட நிறைவு நாளான கடந்த 21-ம் தேதி, பல்வேறு கட்சி உறுப்பினர்களின்எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்பிறகு மே தின நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பு மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் அறிவித்தார்.
இதன்படி, 2 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுவிட்டதாக பேரவைச் செயலாளர் சீனிவாசன், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளார். அதில், " 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர் இச்சட்டமுன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டமுன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென அரசு முடிவெடுத்ததையடுத்து, அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரபூர்வமாக திரும்ப பெறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT