Published : 04 May 2023 09:03 AM
Last Updated : 04 May 2023 09:03 AM
சென்னை: திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார் ஆளுநர் ரவி.
ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது.
ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரிடம் நானும் என்னிடம் அவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.
ஆனால், ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு. அது முழுக்க முழுக்க அபத்தமானது. ஆளுநருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது. அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன் அல்லவா?.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகை நிதி பற்றி பொய்யுரைத்துவிட்டார். அவர் பெட்டி கிரான்ட்டில் விதிமீறல் என்று கூறினார். அந்த பதம் 2000ஆம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது.
ஆளுநர் மாளிகை செலவினம் பட்ஜெட்டுக்கு உட்பட்டது. ஆனால் அதற்கென வரம்பு இல்லை என்றே நிதிக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆளுநரின் விருப்புரிமைக்கு கட்டுப்பாடில்லை. அதனால் பெட்டி கிரான்ட்டில் வரம்பு மீறல் என்பதே அப்பட்டமான பொய்" என்று கூறியுள்ளார்.
சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைப்பு: மேலும், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பிடிஆர் குற்றச்சாட்டு என்ன? - முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில், அதாவது ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை செலவுகள் மற்றும் விருப்புரிமை நிதி என்ற வகையில் நிதி ஒதுக்கப்படுகிறது. பெட்டி கிரான்ட் என்பது, அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இந்த நிதி, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி, திருமண உதவி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த நிதியில் விதிகள் மீறப்பட்டுள்ளன. `அட்சய பாத்திரா' என்ற நிறுவனத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வேறு செலவுகளுக்கும் இந்நிதி மாற்றப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இதனை ஆளுநர் தற்போது மறுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT