Published : 04 May 2023 06:07 AM
Last Updated : 04 May 2023 06:07 AM
சென்னை: முதலியார்குப்பம் கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா தழுதாளிகுப்பத்தை சேர்ந்த மீனவர்கள் தீ.கண்ணப்பன், செ.பன்னீர் ஆகியோர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
செய்யூர் தாலுகா முதலியார்குப்பம் கிராமம் தழுதாளிகுப்பம் முகவத்துவாரப் பகுதியில் கடற்கரையை ஒட்டி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின்கீழ் உரிய அனுமதி பெறாமல் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா சார்ந்த கழிப்பறை, கான்கிரீட் தூண்கள், சுற்றுச்சுவர்கள், குடில்களை அமைத்து வருகிறது. இப்பணிகள் நடைபெறும் இடம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கான்கிரீட் கட்டுமானம் உள்ளிட்ட எந்த பணிகளையும் அனுமதிக்கக் கூடாத இடமாகும்.
இப்பகுதியில் அலையாத்தி தாவரங்கள், கடல் புற்கள் நிறைந்துள்ளன. இப்பகுதி கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாகவும் உள்ளது. எனவே, இப்பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர்அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
செய்யூர் தாலுகா முதலியார்குப்பம் கிராம கடலோரப் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்படுத்தியுள்ள கட்டுமானங்களுக்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்று தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த கட்டுமானங்களை மேற்கொள்ள எந்த அனுமதியும் இந்த ஆணையத்திடம் பெறவில்லை என்று சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
எனவே, முதலியார்குப்பம் கிராமத்தில் கடலோரப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அமைத்துள்ள கழிப்பறை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அகற்ற வேண்டும். கான்கிரீட் தரையுடன் கூடிய ஓலைக் குடில்கள் இருக்கலாம். ஆனால், வரும் காலங்களில் குடில்களோ, நிரந்தர கட்டுமானங்களோ அமைக்க முடியாது.
இனி சுற்றுலாவளர்ச்சிக் கழகம் எந்த கட்டுமானங்களையும் கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய அனுமதி பெற்று, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT