Published : 04 May 2023 04:00 AM
Last Updated : 04 May 2023 04:00 AM
மதுரை: மதுரையில் நேற்று நடந்த மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டத்தில் உள்ளூர் அமைச்சர்கள், மேயர், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆளும் கட்சி பிரமுகர்கள் பங்கேற்கவில்லை.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கி இன்றுடன் நிறைவுபெறுகிறது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது. இதில் வழக்கமாக ஆளும்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏ,க்கள் மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள்.
ஆனால், நேற்று நடந்த தேரோட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ, மேயர் இந்திராணி, உள்ளூர் ஆளும்கட்சி பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வழக்கமாக கோயில் திருவிழாக்கள், அரசு நிகழ்ச்சிகளில் தங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெறுவதற்கு உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், மேயர், கவுன்சிலர்கள் இடையே போட்டி நிலவும்.
ஆனால், நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக உள்ளூர் அமைச்சர்கள், மேயர் பங்கேற்காமல் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திருக்கல்யாணத்தில் திமுக மாநகரச் செயலாளர் கோ.தளபதி மற்றும் சில ஆளும் கட்சியினரே பங்கேற்றனர். அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்று விழாவில் பங்கேற்றனர்.
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை மாநகராட்சிதான் முன்னின்று செய்து வருகிறது. அதற்கான ஏற்பாடுகளையும், கள ஆய்வுகளையும் மேயர் இந்திராணி செய்து வந்தார். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் நேற்று தேரோட்டத்தில் பங்கேற்காதது, உள்ளூர் ஆளும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இது குறித்து திமுக முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னையிலிருந்து தாமதமாக வந்ததால் அவரால் தேரோட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. மேயர் இந்திராணிக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரும் பங்கேற்க வில்லை. இதில் வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. திருக்கல்யாணத்தன்று சென்னையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்ததால் அமைச்சர்கள் பங்கேற்க முடியவில்லை, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT