Last Updated : 04 May, 2023 04:13 AM

1  

Published : 04 May 2023 04:13 AM
Last Updated : 04 May 2023 04:13 AM

மீண்டும் சிவகங்கை தொகுதியை குறிவைக்கும் பாஜக - வாரந்தோறும் பூத் கமிட்டி கூட்டம் நடத்தி ஆலோசனை

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியை மீண்டும் குறிவைத்து பாஜக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இதற்காக வாரந்தோறும் பாஜகவினர் பூத் கமிட்டி கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதியில் கடந்த தேர்தல்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 7 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்பியாக உள்ளார்.

மேலும் ஹெச்.ராஜாவின் சொந்த தொகுதியாகவும் சிவகங்கை உள்ளது. முக்கிய தொகுதியாக கருதப்படும் சிவகங்கையை கைப்பற்ற பாஜக முயன்று வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு ஹெச்.ராஜா போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பனிடம் தோல்வி அடைந்தார்.

அதன் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ஹெச்.ராஜா மீண்டும் போட்டியிட்டு கார்த்தி சிதம்பரத்திடம் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சமீபத்தில் சிவகங்கையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஹெச்.ராஜா, தான் தேர்தல் அரசியலில் இருந்து விலக போவதாகவும், ஆனால் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கட்டாயம் பாஜக போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என இரு கட்சிகளின் தலைமையும் அறிவித்துள்ளன. இந்நிலையில் பாஜக சிவகங்கை தொகுதியை குறிவைத்து தங்களது தேர்தல் பணியைத் தொடங்கி உள்ளது. பாஜக ஒவ்வொரு பூத்துக்கும் 12 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் உள்ளவர்கள் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை கூடி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

மேலும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் விதமாக பூத் அளவில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று பிரச்சினைகளை கேட்டறியவும், மத்திய அரசின் திட்டங்களை விளக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், அதிமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி கட்டாயம் எங்களுக்குத்தான் ஒதுக்கப்படும். மற்ற தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து கூட்டம் நடத்தி வந்தாலும், சிவகங்கை போன்ற நாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்த முறை ப.சிதம்பரம் குடும்பத்திடம் உள்ள சிவகங்கை தொகுதியை பாஜக வசமாக்குவதே இலக்கு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x