Published : 07 Sep 2017 12:26 PM
Last Updated : 07 Sep 2017 12:26 PM
அதிமுகவில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றம் ஆதரவு அணி எம்எல்ஏ.,க்கள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரும் ஓரணியாக இருந்த நிலையில் தற்போது மூன்று பேரும் மூன்று திசையில் பிரிந்து நிற்கின்றனர்.
அதிமுக அணி ஓபிஎஸ், எடப்பாடி அணியாக பிரிந்து பின்னர் மீண்டும் இணைந்தனர். சசிகலா, தினகரனை கட்சியை விட்டு ஓரங்கட்டும் வேலையில் எடப்பாடி தரப்பு இறங்கியவுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என மனு அளித்தனர்.
தனி அணியாக தினகரன் தரப்பும், எடப்பாடி ஓபிஎஸ் ஒரு அணியாகவும், அதிமுக ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 3 பேர் ஓரணியாகவும் செயல்பட்டனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர்.
தனித்தனி கட்சியாக இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் இவர்கள் கட்சித்தாவ முடியாத நிலை. அதிமுக எம்எல்ஏ.,க்களாகத்தான் கருதப்படுவர். இந்நிலையில் இம்மூவரும் ஒன்றாக இணைந்து ஓரணியாக செயல்பட்டனர். சசிகலா மூலம் வாய்ப்பு கிடைத்தது என்று கூறிய கருணாஸ் கூட தினகரனுடன் இணையாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் மூவரும் எடப்பாடி , தினகரன், மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் பேட்டி அளித்த மூவரும் தினகரன், எடப்பாடி இணைய வேண்டும் என்று தெரிவித்தனர்.
தற்போது அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது. ஒன்றாக ஓரணியாக இருந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மூவரும் பிரிந்துவிட்டனர். அதிமுக பாஜக சார்பு எடுக்கிறது, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொள்கை அடிப்படையில் வாக்களிப்பேன் பதவியே போனாலும் பரவாயில்லை என்று தமிமுன் அன்சாரி பேட்டியளித்தார்.
மறுபுறம் தனியரசு எடப்பாடி ஆட்சி என்னால் கவிழ்கிறது என்றால் என் வாக்கு எடப்பாடிக்குத்தான் என்று பேட்டியளித்தார். மூன்றாவது எம்.எல்.ஏவான கருணாஸ் எந்தப்பக்கம் என்ற நிலை எடுக்காமல் இருந்தவர் பகிரங்கமாக தினகரன் ஆதரவு நிலை எடுத்துள்ளார்.
இன்று ஆளுநரை சந்திக்கும் அணியில் தினகரன் அணியுடன் கருணாஸும் செல்கிறார். மூன்று ஆதரவு எம்.எல்.ஏக்களும் அரசியல் சூழ்நிலையில் மூன்று வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றுவிட்டனர்.
மூன்று பேருக்குமே மூன்று தனித்தனி முடிவுகள், எண்ணங்கள் இருந்தன ஆகவே இவர்கள் பிரிந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று இது குறித்து அதிமுக பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT