Published : 04 May 2023 05:45 AM
Last Updated : 04 May 2023 05:45 AM
சென்னை: மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டப் பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.4,240 கோடி கடன் வழங்க மத்திய நிதி நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டப் பணிகளை தமிழகத்தில் ரூ.10,600 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இப்பணிக்கு மத்திய அரசு ரூ.6,360 கோடி கடன் வழங்கும். எஞ்சிய ரூ.4,240 கோடியை மத்திய நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
இத்திட்டப் பணிகளை வரும் 2024-25-ம் ஆண்டுக்குள் முடித்து விட்டால் மத்திய அரசின் ரூ.6,360 கோடி மானியமாக மாறி விடும். அதை திரும்பச் செலுத்த வேண்டியதில்லை. இல்லையென்றால், கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.4,240 கோடியை கடனாக வழங்க, மத்திய அரசின் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன், பவர் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்கு 10.54 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.
இந்த வட்டியில் 2 சதவீதம் குறைத்து 8.50 சதவீதமாக நிர்ணயிக்குமாறு இரு நிறுவனங்களிடமும் மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது. எந்த நிறுவனம் வட்டியைக் குறைக்
கிறதோ அந்த நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ், அதிக தூரம் செல்லும் மின்வழித் தடங்களில் ஒவ்வொரு 8 கி.மீட்டர் தூரத்துக்கும் ‘சுவிட்ச் யார்டு’ கட்டமைப்பு மற்றும் கூடுதல் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதனால், மின்வழித் தடங்களில் பழுது ஏற்பட்டால், முழுவதுமாக மின்விநியோகத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT