Published : 03 May 2023 06:01 PM
Last Updated : 03 May 2023 06:01 PM
புதுச்சேரி: உடைந்து இரண்டு ஆண்டுகளாகியும் புதிதாக செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்காததால் கனமழை பொழிந்தும் தேக்கி வைக்க முடியாமல் மழைநீர் கடலில் சேர்வதால் நிதி திரட்டி கட்டும் நிலைக்கு அரசு தள்ளியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதுச்சேரியில் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்று வட்டார பகுதியில் 20 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அணை பராமரிக்கப்படாததால் 2021-ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் பல்லாயிரம் கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் சென்று சேர்ந்தது.
பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அணையைப் பாதுகாக்க அரசும், பொதுப்பணித் துறையும் தவறியதால் அணை உடைந்ததாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். புதிய அணையை கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே அணை உடைந்த பகுதி அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் சுமார் ரூ.20.40 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் இன்னும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு வரவில்லை.
தண்ணீர் தேக்கி வைக்க முடியாததால் இரண்டு ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் பொழிந்த கனமழையால் கிராம பகுதிகளில் 12 செ.மீ. மழை அளவு பதிவானது. இதனால் நீர் நிலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஆனால் செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணைமுற்றிலும் உடைந்துள்ளதால் மழை நீர் தேங்காமல் கடலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,"அணையில் சிறிய உடைப்பு ஏற்பட்ட போதே அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டதால்தான், முழுமையாக உடைந்தது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் புதிய அணை கட்டும் பணி துவங்கப்படவில்லை. அரசு விரைந்து அணை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கிராமங்களில் பணம் வசூல் செய்து விவசாயிகளே கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் எங்கள் கண் எதிரே கடலுக்கு சென்றடைவது கண்ணீரை வரவழைக்கிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT