Published : 03 May 2023 03:12 PM
Last Updated : 03 May 2023 03:12 PM

பட்டியலினத்தவர் சாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய டிஎன்பிஎஸ்சி-க்கு அதிகார வரம்பு இல்லை: ஐகோர்ட்

சென்னை: பட்டியலினத்தவருக்கான சாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 1996-97ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கேற்று, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர், கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி, பட்டியலினத்தவர் சாதிச் சான்று பெற்றிருந்தார். பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் சமர்ப்பித்த சாதிச் சான்றுக்கு பதில், தந்தை பெயரில் பெற்ற சாதிச் சான்றை சமர்ப்பிக்கும்படி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஜெயராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தகுதியான அதிகாரி வழங்கிய சாதிச் சான்றிதழ் செல்லத்தக்கது என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் திலகவதி அமர்வு, "பட்டியலினத்தவர்கள் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவில் தலையிட மறுத்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், ஜெயராணியின் சாதிச் சான்றிதழை சரிபார்க்கும்படி அரசு கருவூல கணக்கு துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப வேண்டும். அதன்மீது விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் உரிய முடிவை எடுக்க வேண்டும் என மாவட்ட குழுவுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தக் குழுவின் விசாரணையில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை ஜெயராணி வழங்க அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x