Published : 03 May 2023 03:06 PM
Last Updated : 03 May 2023 03:06 PM

காணாமல் போன குளத்தைக் கண்டறிந்து தூர்வாரிய ஊராட்சி மன்றத் தலைவர்: ராமநாதபுரம் ஆட்சியர் பாராட்டு

ராமநாதபுரத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்  

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பல ஆண்டுகளாக காணாமல் போன குளத்தைக் கண்டறிந்து, குளத்தை தூர்வாரிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஓரியூர், கலியநகரி புல்லகடம்பன் உள்ளிட்ட ஊராட்சிகளில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரணி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது குளங்கள் வெட்டபடும் அளவுகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர், குளங்கள், ஊரணி வெட்டப்பட்டுள்ள அளவு குறித்து நேரில் ஆய்வு செய்தார். ஓரியூர் ஊராட்சியில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத ஊரணி, குளங்களை நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூர்வார நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றித் தெரிவித்தனர்.

மேலும் ஆக்கிரமப்புகளை அகற்றி காணாமல் போன குளத்தைக் கண்டறிந்து தூர் வாரிய ஊராட்சி மன்றத் தலைவர் நிரோஷா கோகுல் மற்றும் அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார். கோடைகாலத்தில் மீதமுள்ள குளங்கள், ஊரணிகள், கண்மாய்களை தூர்வாரவும், சாலை மற்றும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தேவையான தார்ப்பாய் மற்றும் மருந்து அடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார், வேளாண் இணை இயக்குனர் சரஸ்வதி, துணை இயக்குனர் தனுஷ்கோடி, உதவி இயக்குனர் ராம்குமார், உதவி பொறியாளர் புஷ்பநாதன், நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்ட பொறியாளர் தேவராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x