Published : 03 May 2023 02:24 PM
Last Updated : 03 May 2023 02:24 PM

நீலகிரியில் தொடங்கியது குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம்

ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து சிறுதானிய அரங்குகளை பார்வையிட்ட அமைச்சர்கள்.

உதகை: தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களையும் சேர்த்து வழங்க அரசு முடிவெடுத்து பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம்
நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ ராகி (கேழ்வரகு) வழங்கும் திட்ட தொடக்க விழா உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2.29 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு மாதம் ஒன்றுக்கு 439 மெட்ரிக் டன் கேழ்வரகும், தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4.66 குடும்ப அட்டைகளுக்கு 932 மெட்ரிக் டன் கேழ்வரகு வழங்கப்படவுள்ளது. இதனிடையே, கேழ்வரகு விளைச்சல் மற்றும் இருப்பை பொறுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

ராகியில் நார்ச் சத்து, இரும்பு, மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச் சத்துகளின் ஆற்றல் மையமாக இருக்கின்றது. சிறுதானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் சிறந்த தற்காப்பு கருவியாக உள்ளன. எனவே தமிழக அரசு ரேசன் கடைகளில் வழங்கும் 2 கிலோ கேழ்வரகை பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பிரபாகர், மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x