Published : 03 May 2023 11:09 AM
Last Updated : 03 May 2023 11:09 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 3) வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர கோஷங்களை எழுப்பி 4 மாசி வீதிகளிலும் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை ஒட்டி நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் ஏப்.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம் நாள் திருவிழாவாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30ல் நடைபெற்றது. அடுத்த நாள் மே 1-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று மே 2-ல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் திருமண வைபோகத்தின் போது தங்கள் திருமாங்கல்யத்தை புதுப்பித்து கட்டி கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (மே 3) தேரோட்டம் நடைபெற்றது. பிரியாவிடை, சுந்தரேசுவரர் பெரிய தேரிலும் மீனாட்சி அம்மன் தனித்தனி தேரிலும் எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாளை மே 4-ம் தேதியுடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதற்கு அடுத்த நாள் மே 5-ல் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT