Last Updated : 03 May, 2023 06:55 AM

1  

Published : 03 May 2023 06:55 AM
Last Updated : 03 May 2023 06:55 AM

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் ஆட்கள் தட்டுப்பாடு: அரசு ஊழியர்களை வேலைக்கு அழைத்த விவசாயி

தென்காசி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்களை வேளாண் பணிக்கு அனுப்புமாறு விவசாயி ஒருவர் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தேசியஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை, விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காத விரக்தியில் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பாறைப்பட்டியை சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் என்பவர், தென்காசியில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நூதன மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. எனவே ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருந்தால் அவர்களை தனது நிலத்தில் களை எடுக்க அனுப்பி வைக்க வேண்டும்.அவர்களுக்கு கூலி, பஞ்சப்படி, பயணப்படி, மதிய உணவு எனஅனைத்தும் கொடுக்க தயாராகஇருக்கிறேன்’ என கூறியுள்ளார். இந்த மனு சமூக வலை தளத்தில் பரவி நகைப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, இந்து தமிழ் நாளிதழிடம் மகேஸ்வரன் கூறியதாவது: “விவசாய வேலைக்கு பெண் தொழிலாளருக்கு கூலியாக ரூ.250,ஆண் தொழிலாளருக்கு ரூ.600கொடுக்கிறோம். ஆண் தொழிலாளர்கள் வரப்பு, பாத்தி கட்டுவதற்கு ஆரம்ப கட்டத்தில் மட்டுமேதேவைப்படுவார்கள். அதன் பின்னர்நாற்று நடுதல், களை எடுத்தல்,அறுவடை செய்தல் போன்ற பணிகளுக்கு பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இயந்திரத்தை வைத்து வேலை செய்துவிட்டு, ஆட்களை வைத்து செய்ததாக கணக்கு எழுதி முறைகேடு செய்கின்றனர். 100 நாள் வேலையை 200 நாள் வேலையாகக் கூடமாற்றட்டும். ஆனால் தொழிலாளர்களை விவசாயப் பணியிலும் ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு விவசாயிகள் மூலம் கூலி கொடுக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர் பேச்சிமுத்து என்பவர் கூறும்போது, “எங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த சம்பளம்294 ரூபாய். ஆனால், 200 ரூபாயே கிடைக்கிறது. இத்திட்டத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர் உள்ளிட்டோரின் கூட்டுச்சதியால் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை. அதிகபட்சம் 60 நாட்கள் வரையே வேலை கிடைக்கிறது” என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஜாகிர்உசேன் கூறும்போது, “தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தால் விவசாய தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 100 நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை விவசாய தொழிலுக்கும் பயன்படுத்தி, அவர்களுக்கு விவசாயிகள், அரசு பங்களிப்போடு சம்பளம் கொடுக்கலாம்” என்றார்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “இனிவரும் காலங்களில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணையம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்துறை மூலம் இயந்திர மயமாக்கலை விரிவுபடுத்த வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x