Published : 10 Sep 2017 10:23 AM
Last Updated : 10 Sep 2017 10:23 AM

புத்துயிர் அளித்த பெற்றோர் - ஆசிரியர் கழகம்: மிடுக்குடன் நடைபோடும் அதிகரட்டி ஊ.ஒ. தொடக்கப் பள்ளி; ஆசிரியருக்கு ஊதியம் வழங்கும் ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்டத்தில் 1832-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 4 பள்ளிகளில் அதிகரட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் ஒன்றாகும். முன்னோடி பள்ளியான இதில், காலப்போக்கில் மாணவர் சேர்க்கை குறைந்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

தங்களுக்கு கல்வி அளித்த பள்ளி தங்கள் கண் முன்னே மூடப்படுவதை தடுக்க இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் களமிறங்கியதன் பயனாக, தற்போது இப் பள்ளியில் 140 மாணவர்கள் படிக்கின்றனர்.

மூடப்படும் நிலையிலிருந்த பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் புத்துயிர் ஊட்டியுள்ளது.

பள்ளி தலைமையாசிரியர் என்.பி.ராஜேஸ்வரி ‘தி இந்து’-விடம் கூறியதாவது: இப்பள்ளியில் கடந்த ஆண்டு 12 மாணவர்கள் மட்டுமே இருந்ததால், பள்ளி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவன் ஆகியோரின் முயற்சியால் தற்போது 140 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.

இப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் ஆங்கில வழியில் தொடங்கப்பட்டன. இந்த வகுப்புகளில் தற்போது 80 மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும், 4 மற்றும் 5-ம் வகுப்புகள் தமிழ் வழியும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இருவர் நிரந்தரமாகவும், 6 ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாகவும் பணிபுரிகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், கணினிப் பயிற்சி, வாகன வசதி, சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் பி.ரமேஷ் கூறியதாவது: எமரால்டு அணையை திறக்க வந்தபோது காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் இப்பள்ளிக்கு வந்துள்ளனர். காமராஜர் நினைவாக அதிகரட்டி மேல்நிலைப்பள்ளியில் அவரது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து மூடும் நிலை ஏற்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்தாலோசித்தோம். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியருடன் சேர்ந்து வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டோம். நேர்முக தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து ஆசிரியர்களும் எம்.ஏ., பி.எட்., பட்டம் பெற்றவர்கள்.

கல்வி மட்டுமல்லாது, விளையாட்டுக்கும் முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு கள பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

ஆசிரியர்களின் பங்களிப்பு

தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படும் இப்பள்ளியின் மாத பராமரிப்புச் செலவு ரூ.1.25 லட்சம். இதை பெற்றோர் ஆசிரியர் கழகமே ஏற்றுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் இருவரும் தங்கள் ஊதியத்திலிருந்து ஓர்ஆசிரியருக்கு ஊதியம் வழங்குகின்றனர். பிற 5 ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் ஊதியம் வழங்குகிறது. பள்ளி தலைமையாசிரியர் தனது பங்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு வழங்கியுள்ளார். பலரும் வழங்கும் நன்கொடையை கொண்டு பள்ளி நடத்தப்படுவதாகவும், பள்ளி வாகனம் வாங்க வட்டியில்லா கடனாக சுந்தரதேவன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். பலரும் நன்கொடை அளிப்பதால் பள்ளி புத்துயிர் பெற்று நடந்து வருவதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பெருமிதம் கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x