Published : 03 May 2023 04:23 AM
Last Updated : 03 May 2023 04:23 AM

விபத்துகளை குறைப்பதில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பச்சூரில் அமைக்கப்பட்ட சாலை தடுப்புகளால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர்: அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் என கண்டறியப்பட்ட 51 இடங்களில் காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை யால் விபத்துகளில் உயிரிழப்பை குறைப்பதில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, சாலையை கடப்பவர்கள், அதிகப்படியான வேகத்தில் செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் வாகனங்களில் செல்வது போன்ற காரணங்களால் 80 சதவீதம் விபத்துகள் ஏற்படுவதும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக விபத்துகள் ஏற்படுவதும் தெரியவந்தன.

இதன் தொடர்ச்சியாக, விபத்துகளை குறைக்கும் பணியாக நடத்தப்பட்ட ஆய்வில் 51 இடங்களில் அதிக விபத்துகள் நடைபெறுவது கண்டறியப்பட்டன. இதில், பச்சூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சூரில் சாலையை கடக்கும் வாகனங்களால் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு, காவல் துறையினர் சாலை தடுப்புகள் அமைத்து வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு கைமேல் பலனாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரே ஒரு சிறு விபத்து கூட பச்சூர் பகுதியில் நடைபெறவில்லை என்ற மகிழ்ச்சியான தகவலாக காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அதேபோல், விபத்துகளை குறைப்பதில் திருப்பத்தூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் குறித்து விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் நடத்திய ஆய்வில் 37 இடங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகு காவல் துறையினர் ஆய்வில் மேலும் 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டு மொத்தம் 51 இடங்கள் என்றானது.

இந்த பகுதிகளில் வேகத்தடை அமைப்பது, எச்சரிக்கை பலகை வைப்பது, பிளிங்கர்கள், சாலைகளில் தடுப்புகள் வைப்பது, சாலைகளை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் கருத்துரு வழங்கியுள்ளோம். அனைத்துத்துறைகளின் பங்களிப்புடன் இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். மாலை 4 மணிக்கு பிறகு விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களில் வாகன சோதனை, காவல் துறையினர் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை குறைப்பதில் காவல் துறையினர் மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துடன் நடப்பாண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விபத்துகளில் உயிரிழப்பு 54 சதவீதம் குறைத்து மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளோம்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் சாதாரண விபத்துகளின் எண்ணிக்கை 43 சதவீதம் குறைந்துள்ளது. விபத்துகளை குறைப்பதில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x