Last Updated : 02 May, 2023 06:22 PM

 

Published : 02 May 2023 06:22 PM
Last Updated : 02 May 2023 06:22 PM

ஜிப்மரில் ஏழைகளுக்கு சிகிச்சைகள் முற்றிலும் இலவசம்தான்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உறுதி

கோப்புப் படம்

புதுச்சேரி: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்தான் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெறும் மாபெரும் சுகாதாரத் திருவிழாவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "3 நாட்கள் சுகாதாரத் திருவிழா நடைபெறுகிறது. எல்லா துறைகளையும் சார்ந்த மருத்துவர்களுடன் பெரிய மருத்துவமனையையே இங்கு கொண்டு வந்துள்ளனர். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலவசமாக முழு உடல் பரிசோதனையை செய்து கொள்வதற்கு இந்த மருத்துவ திருவிழா முக்கிய காரணியாக இருக்கும்.

கரோனாவுக்கு பிறகு சில நோய்கள் அதிகரிப்பதை நாம் பார்க்கின்றோம். குறிப்பாக திடீரென மாரடைப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இது சம்பந்தமாக ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. கரோனா வந்தவர்கள் கூட இங்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தவரையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக வறுமை கேட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பெங்களுர் சென்று ரூ.30 ஆயிரத்துக்கு ஒரு பரிசோதனை செய்தால், அந்த பரிசோதனைக்கூட ஜிப்மரில் இலவசம்தான். ஜிப்மரில் புதிய வகையான அனைத்து உயர்தர பரிசோதனை சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வறுமை கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு இந்தப் புதிய வகையான பரிசோனைக்கு மட்டும், என்ன வேதிப்பொருள் பயன்படுத்துகிறார்களோ அதற்கு ஏற்பத்தான் கட்டணம். உதாரணமாக வெளியே ஒரு பரிசோதனைக்கு ரூ.35 ஆயிரம் என்றால், ஜிப்மரில் ரூ.5 ஆயிரம் தான். அதேபோல், ரூ.3,500 என்றால், இங்கு ரூ.500 தான்.

ஆகவே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலும் மருத்துவம் இலவசம்தான். இது அவசியம் இல்லாமல் அரசியலாக்கப்படுகிறது. ஜிப்மர் பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. அங்கு சிறு சிறு குறைகள் இருந்தாலும் அதனை அரசு சரி செய்துவிடுகிறது. அதனால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள், மருந்துகள், அனுமதி, சிகிச்சை முறைகள் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

மாநில அரசு சார்பில் முதல்வர் சொன்னது போல் சுகாதாரத் துறையில் புதுச்சேரி எல்லா வகையிலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். அதனால் ஜிப்மர் நமக்கு இருந்தாலும் அதற்கு இணையாக அல்லது ஜிப்மரை விட புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் இன்னும் உயர்த் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. ஜிப்மரில் 60 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ஜிப்மர் எல்லா பகுதி மக்களுக்கும் பயன் தருவதாக இருக்கிறது என்பதற்கு நாம் பெருமைப்படலாம்.

சேதராப்பட்டில் ஜிப்மருக்கு உயர்தர சிகிச்சை மையம் அமைக்க இடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு வேறு இடம் மாற்றப்பட்டுள்ளது. இதில் அரசு கொள்கை ரீதியாக சில முடிவுகள் எடுத்துள்ளது. எதுவுமே கிடப்பில் போடப்படவில்லை. இந்த அரசு வந்தபிறகு அனைத்தும் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் ‘‘பெஸ்ட்’’ புதுச்சேரி என்றார். நாங்கள் ‘‘பாஸ்ட்’’ புதுச்சேரியாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x