Published : 02 May 2023 04:01 PM
Last Updated : 02 May 2023 04:01 PM
சென்னை: கோயிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை அழகர் கோயிலுக்குச் சொந்தமாக மேலமடை கிராமத்தில் உள்ள 1.83 ஏக்கர் நிலம், அந்தக் கோயிலின் பட்டராக இருந்த லக்ஷ்மணா என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த நிலத்தை வேறொரு நபரின் பெயருக்கு எழுதி வைத்தார். அதனை மாவட்ட ஆட்சியரும் தனது உத்தரவில் உறுதி செய்தார். இதனை எதிர்த்து அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயப்பட்டது. இந்த மனு நிலுவையில் இருக்கும்போதே லக்ஷ்மண பட்டர் காலமானார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கோயிலில் அர்ச்சனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதை ஒப்புக்கொண்டதற்காக மட்டுமே லக்ஷ்மண பட்டருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அதனை மற்றவர் பெயருக்கு மாற்றவோ, விற்கவோ அதிகாரம் இல்லை. பட்டா வழங்கப்பட்டிருந்தாலும் கூட மற்றவருக்கு விற்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இடமில்லை" என்று வாதிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அனைத்து சட்ட விதிகளையும் ஆய்வு செய்தே மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்" என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கோயிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது எனக் கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT