Last Updated : 02 May, 2023 03:21 PM

2  

Published : 02 May 2023 03:21 PM
Last Updated : 02 May 2023 03:21 PM

தென்காசி - கீழப்பாவூர் குளத்தில் தடை செய்யப்பட்ட ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்

தென்காசி: தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் குளத்தில் 20 கிலோ எடை கொண்ட அளவிலான ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் பெருகியுள்ளன. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் குளம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு சிற்றாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. மேலப்பாவூர் குளம், கீழப்பாவூர் குளம் ஆகியவை நிரம்பிய பின்னர் அருணாப்பேரி குளம், நாகல்குளம், ஆலங்குளம், தொட்டியான்குளம் உட்பட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்லும். நேற்று தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் இன்று கீழப்பாவூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வந்தது.

இந்நிலையில், பாவூர்சத்திரம்- சுரண்டை சாலையில் கீழப்பாவூர் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் அருகில் ராட்சத அளவிலான ஏராளமான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் துள்ளி விளையாடின. இதை ஏராளமான மக்கள் அங்கு உள்ள பாலத்தின் மீது இருந்து வேடிக்கை பார்த்தனர்.

வழக்கமாக குளத்தில் இருக்கும் கெளுத்தி மீன்கள் ஒல்லியான உடல்வாகுடன் நீளமாக காணப்படும். ஆனால் மிகப்பெரிய அளவில் 20 கிலோவுக்கு மேல் எடை இருக்கக்கூடிய அளவுக்கு இருந்த ராட்சத மீன்களை பார்த்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த மீன்கள் இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் சிலருக்கு இந்த வீடியோவை அனுப்பி விசாரித்தபோது, அவை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து திருநல்வேலி மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம் கூறும்போது, “ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த மீனை உட்கொண்டால் புற்றுநோய், தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் வரும். மேலும், இந்த மீன்கள் நாட்டின மீன்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பதாக இருக்கும். இந்த மீன்கள் அதிகரித்துவிட்டால் மற்ற மீன் இனங்கள் அனைத்தையும் அழித்துவிடும். அதனால் இந்த மீன்களை வளர்க்க அரசு தடை செய்துள்ளது.

இந்த மீன்கள் குளத்தின் அடிப்பகுதியில் வசிக்கும். புதிதாக தண்ணீர் வந்ததால் வெளியே வந்துள்ளன. மற்ற குளங்களுக்கும் இந்த மீன் இனம் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. இவை கீழப்பாவூர் குளத்துக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் ஒரு முறை வந்துவிட்டால் அவற்றை அழிப்பது சாதாரண விஷயமல்ல. அலுவலர்களை அனுப்பி, மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x