Published : 02 May 2023 01:25 PM
Last Updated : 02 May 2023 01:25 PM
சென்னை: ’உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் முதல்வரிடம்,"கடந்த அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சரின் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை டெண்டர்கள் வழங்கியதில் தொடங்கி, காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் என பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் நிலை என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! அதிமுக.,வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது. ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில், இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்து, கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT