Published : 02 May 2023 04:21 AM
Last Updated : 02 May 2023 04:21 AM

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: சென்னையில் மே தின நிகழ்ச்சியில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பு மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும் என்று சென்னையில் மே தின நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மே தினம் எனப்படும் உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் பேசியதாவது:

உலக சோஷலிச இயக்க தலைவர்கள் 1889-ல் கூடி மே 1-ம் தேதியை தொழிலாளர் வர்க்க ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டத்துக்கான சர்வதேச தினமாக அறிவித்தனர். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் முயற்சியால் தமிழகத்தில் சென்னை கடற்கரையில் 1923-ல் ‘மே தினம்’ முதன்முதலாக கொண்டாடப்பட்டது.

தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 6.71 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 25-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.

சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை சார்பில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதுபற்றி ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. பெரும் முதலீடுகளை ஈர்த்து, அதன்மூலமாக தமிழகத்தில், குறிப்பாக, தென் மற்றும் வட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நோக்கில்தான் அந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டத் திருத்தம் அல்ல.மிக மிக சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே, அதுவும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் அரசின்பரிசீலனைக்கு பிறகே பணிநேரம்குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்பதே அந்த சட்டத் திருத்தம். தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தன.ஆனாலும், தொழிற்சங்கத்தினருக்கு அதில் சில சந்தேகங்கள் இருந்தன.

திமுக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும், திமுக தொழிற்சங்கமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதில் வேடிக்கை. அதற்காக அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். திமுகவின் ஜனநாயக மாண்பு, இதன்மூலம் மெய்ப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய விமர்சனம் வந்ததும்,உடனடியாக அனைத்து தொழிற்சங்கத்தினரையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு தொழிற்சங்கத்தின் கருத்துகளை கேட்டு, உடனடியாக எந்தவித தயக்கமும் இன்றி, துணிச்சலோடு அரசு அதை திரும்ப பெற்றது. தொழிற்சங்கத்தினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட இரண்டே நாளில்அந்த மசோதா திரும்ப பெறப்பட்டது.

விட்டுக்கொடுப்பதை ஒருபோதும் அவமானமாக கருதியது இல்லை. அதைபெருமையாக கருதுகிறேன். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதை உடனடியாக திரும்பபெறுவதும் துணிச்சல்தான். இப்படித்தான் கருணாநிதி எங்களுக்கு பயிற்சி தந்திருக்கிறார். அதனால்தான் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளோம். உரியதுறை மூலம் பேரவை செயலகத்துக்கு இதுகுறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது குறித்த செய்தி, பேரவை உறுப்பினர் அனைவருக்கும் செய்திக்குறிப்பு மூலம் விரைவில் தெரிவிக்கப்படும்.

எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர் நலனில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண்டும். தொழிலாளர்களும் வாழ வேண்டும். தொழிலாளர் உரிமைகளை காப்பதோடு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அனைத்து செயல்களையும் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள், தொழிலாளர் முன்னேற்றசங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதல்வரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத்தினர் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x