Published : 02 May 2023 04:47 AM
Last Updated : 02 May 2023 04:47 AM
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2021 மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. இதையடுத்து, கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. முதலில், போக்குவரத்து துறையை கவனித்து வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து அத்துறை எஸ்.எஸ்.சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பின்னர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், சில அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, வரும் மே 7-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த சூழலில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பெற்றுள்ள முதல்வர் சில மாற்றங்களை செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக செயல்படாத அமைச்சர்களை மாற்றிவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், சில அமைச்சர்களுக்கு துறைகளை மாற்றி வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா அல்லது மானா மதுரை எம்எல்ஏ தமிழரசி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழரசி ஏற்கெனவே இத்துறையின் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.
இதுதவிர, பால்வளத் துறை அமைச்சர் நாசரும் இந்த பட்டியலில் உள்ளார். பால் கொள்முதல், பால் விநியோகம் தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், நாசர் அதை சரியாக கையாளவில்லை என்ற வருத்தம் முதல்வருக்கு உள்ளதால், அவரை மாற்றிவிட்டு மூத்த அமைச்சர் ஒருவருக்கு இத்துறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதவிர, டெல்டா மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கூடுதலாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்துக்கான அறிவிப்புகள் சில நாட்களில் வெளியாகலாம் என்று தெரிகிறது.
ஆடியோ குறித்து விளக்கம்: இதற்கிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோக்கள் வெளியாகின. இவை ஜோடிக்கப்பட்டவை என்று அமைச்சர் மறுத்தார்.அதே நேரம், முழுமையான ஆடியோவை வெளியிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். இதனால், கடந்த சில நாட்களாக திமுக வட்டாரம் பரபரப்பாக இருந்தது.
இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலினை,அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று காலை சந்தித்தார். அப்போது, ஆடியோ விவகாரம் குறித்து முதல்வரிடம் அமைச்சர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதவிர, அலுவல் ரீதியானஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
வரும் 23-ம் தேதி முதல்வர் லண்டன் செல்கிறார். தொடர்ந்து சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும் பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது, பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஒப்புதல் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதுதவிர, பேரவையில் துறைவாரியாக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT