Published : 02 May 2023 04:38 AM
Last Updated : 02 May 2023 04:38 AM
சென்னை: ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கலை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தனது மனைவி தனலட்சுமி, மகன் டில்லிராஜா ஆகியோரது பெயரில் ஸ்ரீபெரும்புதூரில் 2 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பழைய கட்டிடம் இருந்த இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் இந்த இடத்தை விலை குறைவாக ரூ.10 லட்சத்துக்கு வாங்கியதாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திரன், அவரது மனைவி, மகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ‘சம்பந்தப்பட்ட நிலத்தை வாங்கிய பிறகு, போலீஸ் அதிகாரிகள், கவுன்சிலர், வழக்கறிஞர் சேர்ந்து ரூ.10 லட்சம் கேட்டனர். பணம் கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததால் எங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது உத்தரவில் கூறியதாவது:
அரசுத் துறைகளில் லஞ்ச, லாவண்யம் மலிந்துவிட்டது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு எதிராக அதிக அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோதும், போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசுத் துறைகளில் பணிபுரிவோருக்கு சட்டத்தின் பயத்தை காட்டினால் மட்டுமே ஊழலை கட்டுப்படுத்த முடியும். ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமிக்கிறேன்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT