Published : 18 Sep 2017 05:55 AM
Last Updated : 18 Sep 2017 05:55 AM

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 81% இடங்கள் நிரம்பவில்லை: வாய்ப்பு மறுக்கப்பட்டோர் யார் என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 81 சதவீத இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட் டோர் குழந்தைகளைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் இடங்கள் இருந்தன. இதில் இதுவரை சுமார் 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மாநிலம் முழுவதும் 2-ம் கட்டமாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்றும் முழுமையாக நிரப்பப்படவில்லை.

சுமார் 5 ஆயிரம் இடங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 180 இடங்களில், 4 ஆயிரத்து 228 இடங்கள் (81 சதவீதம்) இன்னும் நிரப்பப்படவில்லை. இந்நிலை யில் 3-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு, அம்மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவினர் (சிறப்புப் பிரிவு), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் என 3 இனங்களில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அனைத்து பிரிவினரும் பிறப்பு மற்றும் முகவரி சான்றை சமர்ப்பிக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர், வருமானச் சான்றை கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்டோர் (சிறப்பு பிரிவு) பிரிவின் கீழ், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளி, 3-ம் பாலினத்தினர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை ஆகி யோர் அதற்கான முன்னுரிமை சான்றை அளிக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் அல்லாத பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்டோர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் வருகின்றனர். இவர்களுக்கு வருமான வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. அவர்கள் சாதிச் சான்றை மட்டும் கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. யாரெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டோர் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு வருமான வரம்பு இல்லை என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

அதன் காரணமாக, ரூ.2 லட்சத்துக்கும் அதிக வருமானம் உள்ளவர்கள், அனைவருக்கும் ரூ.2 லட்சம் வரைதான் வருமான வரம்பு என கருதி, தங்கள் குழந்தைகளைக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்காமல், வழக்கம்போல கல்வி கட்டணம் செலுத்தி சேர்த்துள்ளனர். அதன் காரணமாகவே, திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை போதிய அளவு நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

மறுசேர்க்கைக்கும் வாய்ப்பு

இதுதொடர்பாக மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களையும் அழைத்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

ஏற்கெனவே பள்ளியில் சேர்ந்து இருந்தாலும், அந்த பள்ளியில் கல்வி உரிமைச் சட்ட இடங்கள் இருப்பின், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு இதன்மூலம் இடம் கிடைத்தால், மாணவர் படிக்கும் பள்ளியில், அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பித் தரவும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x