Published : 01 May 2023 06:54 PM
Last Updated : 01 May 2023 06:54 PM
மதுரை: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையொட்டி மதுரையில் 3,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் முத்திரை பதிக்கும் இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நளை காலை 9 மணிக்குள் நடக்கிறது. கோயிலுக்குள் மேற்காடி வீதியில் இதற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் ரூ.200, ரூ.500 அனுமதி பாஸ் பெற்றவர்கள், விஐபிகள் உட்பட 6 ஆயிரம் பேர், டிக்கெட் இன்றி 6 ஆயிரம் பேர் என சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேற்கு கோபுரம் வழியாக விஐபிக்களையும், வடக்கு கோபுரம் வழியாக ரூ.200, 500 பாஸ் பெற்றவர்களையும், தெற்கு கோபுர வாசலில் பொதுமக்களையும் அனுமதிக்க கோயில் நிர்வாகம், காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி கி.சங்கர் கடந்த 2 நாளுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்து, சில ஆலோசனைகளை கூறிச் சென்றார்.
இந்நிலையில், திருக்கல்யாண நிகழ்வையொட்டி சித்திரை வீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்திரை, ஆடி வீதிகளில் பக்தர்கள் வரிசையாக செல்வதற்கு பேரிகார்டுகள் கட்டப்பட்டுள்ளன. திருமண மேடை பகுதி உட்பட ஆடி வீதிகளில் நேற்று வெடி குண்டு தடுப்பு போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். திருக்கல்யாண நிகழ்வுக்கு வருபவர்களின் நான்கு சக்கர வானங்களை நிறுத்த தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, மஞ்சள் நிற சீட்டு வைத்திருப்போர் மேலாவணி வீதியிலும்,ரோஸ் கலர் பெற்றவர்கள் வடக்காவணி வீதி மற்றும் மாநகராட்சி தரைத்தளம் நிறுத்துமிடத்திலும், நீல நிறம் வைத்திருப்பவர்கள் தெற்காவணி மூலவீதியிலும் தங்கள் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் வருவோர் கிழக்கு, மேற்கு, தெற்கு மாசி வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்தவேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். மொத்தத்தில் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் சுமார் 3,500 போலீஸார் திருக்கல்யாண பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து 1,500 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சித்திரை திருவிழா முடியும் வரை அவர்கள் மதுரையில் பணியில் இருப்பர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT