Published : 01 May 2023 03:24 PM
Last Updated : 01 May 2023 03:24 PM
சென்னை: எட்டுமணி நேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வரின் நிலைபாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் உன்னதநாளான மே நாளில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த யாவருக்கும் விசிக சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தமது குருதியைக் கொட்டிய, இன்னுயிர் நீத்தப் போராளிகள் அனைவருக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
'எட்டுமணி நேர வேலை' என்பது உழைப்போரின் உரிமை என நிலை நாட்டிய புரட்சிகர வரலாற்றினைப் போற்றும் நாளாகவே இந்த மே நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வுரிமையினைப் பறிக்கும் சதி முயற்சிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஒன்றிய அரசு தொழிலாளர்களின் நலன்களுக்கான 44 சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து வேளாண்குடியினர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இந்திய அரசைப் பணியவைத்து அச்சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தனர். அதே போல தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிர்த்தும் நாடே கொந்தளித்திருக்க வேண்டும். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அது நிகழவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
இன்று தொழில்கள் அனைத்தையும் கார்ப்பரேட்மயமாக்கும் வேலைகளில் தீவிரம் காட்டும் ஆட்சியாளர்கள், தொழிலாளர்களின் உரிமைகளை ஒரு பொருட்டாகவே கருதாத மிகவும் கேடான போக்குகள் மேலோங்கி வருகின்றன. இந்நிலையில், தொழிற்சங்க உரிமைகளையும் தொழிலாளர் நலன்களையும் பாதுகாத்திட இந்நாளில் உறுதியேற்போம்.
தமிழ்நாடு முதல்வர், அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12மணி நேர வேலை என்னும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்ததுடன், இன்றைய மே நாளில் அதனைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். எட்டுமணி நேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வரின் இந்த நிலைபாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது. அத்துடன் முதல்வருக்கு பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
தொழிலாளர்கள் ஒன்றுகூடினால் உரிமைகளை வென்றெடுக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் இயலும் என்பதற்குச் சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இன்றையநாள் உழைக்கும் மக்களின் வெற்றி நாள்.தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குத் தடையாகவுள்ள சட்டத்தொகுப்பின் சில பகுதிகளை நீக்குவது இன்றியமையாத ஒன்றாகும். எனவே, அவற்றை நீக்கிட இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென இந்நாளில் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT