Published : 01 May 2023 03:17 PM
Last Updated : 01 May 2023 03:17 PM
புதுச்சேரி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அனுமதிக்கேட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளதாகவும், பாஜக ஒரு போதும் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்காது என்றும் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல் நிலையங்களுக்கும் 33 வாகனங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல் நிலையங்களுக்கும், அதிகாரிகளுக்கும் 71 வாகனங்கள் வாங்குவதற்காக இதுவரை ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 33 வாகனங்கள் ரூ. 3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியின் லாஸ்பேட், ரெட்டியார் பாளையம் ஆகிய பகுதிகளுக்கான காவல் நிலையங்களை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டில் காவல்துறை தலைமை அலுவலகம், கரிக்கலாம்பாக்கம் காவல்நிலையம் ஆகியவற்றைக் கட்டவும், காரைக்காலில் எஸ்பி அலுவலகம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவலர் தேர்வில் உடல் தகுதித் தேர்வு நடந்துள்ளது. விரைவில் எழுத்துத் தேர்வு நடக்கும். ஊர்க் காவல்படையில் 500 பேரை தேர்வு செய்ய விரைவில் பணிகள் துவங்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய முதலில் முன்முயற்சி எடுத்தது புதுச்சேரி மாநிலம்தான்.ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அனுமதிக்கேட்டு மத்திய அரசுக்கு புதுச்சேரியில் இருந்து கோப்பு அனுப்பியுள்ளோம். பாஜக ஒருபோதும் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்காது.
புதுச்சேரியில் போலீஸாருக்கு பிறந்தநாள், திருமண நாள் உட்பட அவர்கள் கேட்கும் நாளில் விடுமுறை தர சொல்லியுள்ளோம். வார விடுமுறை தருவது அரசு பரிசீலனையில் உள்ளது. ரோந்து பணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு எடுப்போம். ரோந்து பணிக்கான வாகனங்கள் சீரமைத்து இயக்குவோம். பாஜக பிரமுகர் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
புதுச்சேரியில் வரும் ஜூன்1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, சீருடை, சைக்கிள், லேப்டாப் அளிக்கப்படும். விளையாட்டுத்துறை தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும். அதற்கான பணிகள் நடக்கிறது. சட்டத்துறை ஒப்புதல் வந்தவுடன் அமைச்சரவையில் முடிவு எடுத்து ஆளுநர் ஒப்புதலுடன் இத்துறை தனியாக அறிவிக்கப்படும். கந்து வட்டி புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT