Published : 15 Sep 2017 07:33 AM
Last Updated : 15 Sep 2017 07:33 AM
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘யாதும் தமிழே’ 5-வது ஆண்டின் 2-ம் நாள் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் சர்.முத்தா கான்செர்ட் ஹாலில் நாளை (செப். 16) நடைபெறுகிறது. கவிஞர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி பங்கேற்கும் ‘தலைமுறைகள் பேசும் தமிழ்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியோடு விழா தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக ‘தாயே தமிழே வணங்குகிறோம்... உன் பாதம் தொட்டே தொடங்குகிறோம்’ என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி. மேட்லீ ப்ளூஸ் குழுவின் ஹரீஸ் மற்றும் பிரஷாந்த் இசையில், சத்யபிரகாஷ், சையத், காவியா ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்தப் பாடல் வரிகள் உருவானது குறித்து ‘தி இந்து’ விடம் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் கவிஞர் மதன் கார்க்கி...
‘‘நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்தை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கும். நாம் எவ்வளவு கடந்து வந்திருக்கிறோம். நம் மொழி எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது என்பதையெல்லாம் அந்தப் பாடல் நினைவுபடுத்தும். வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு நான் சென்றிருந்தபோது அங்குள்ளவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழுக்கான வாழ்த்தாகப் பார்க்காமல் தமிழ்நாட்டுக்கான வாழ்த்தாகப் பார்ப்பதை பார்த்து நான் பெருமைப்பட்டிருக்கிறேன்.
குறிப்பாக இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் பலருக்கும் ‘தமிழ் என்பது ஒரு நாடு, ஒரு எல்லை என்ற உணர்வு கடந்து ஒரு மொழிசார்ந்த உணர்வாக’ இருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து நம் மாநிலத்துக்கு மட்டும் என்றில்லாமல் எல்லைகள் கடந்து, உலகம் முழுக்க தமிழர் இருக்கும் இடமெல்லாம் ஒலிக்கின்ற பாடலாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
அப்படியான எண்ணத்தில் இருந்தபோதுதான் ‘தி இந்து’ சார்பில் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சிக்கு தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதித் தருமாறு கேட்டார்கள். அதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன். பிடித்த ஒரு மொழி... அந்த மொழியின் எளிமை யான சொற்களைக் கொண்டு இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொண்டு பாடும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த வாழ்த்துப் பாடல்.
தமிழுக்கு எத்தனையோ பேர் கொடைகள் கொடுத்திருக்கிறார்கள். தமிழும் எத்தனையோ பேரை நமக்குக் கொடுத்திருக்கிறது. இந்தப் பாடலில், ‘வள்ளுவன் தந்தாய், அவ்வைகள் தந்தாய், கம்பன் தந்தாய், பாரதி தந்தாய்’ என்ற வரிகளை எழுதியிருக்கிறேன். இந்த நால்வரையும் தமிழுக்கான குறியீடாகக் கொண்டுதான் இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறேன்.
தமிழ் மொழியில் இருந்து எத்தனையோ மொழி பிரிந்தும் பிறந்தும் இருந்தாலும் தமிழ் என்றென்றும் இளமையாகவே இருக்கிறது. அந்தத் தன்மையும் பாடலில் இடம்பெறும். காலத்துக்கேற்ப எத்தனையோ தொழில்நுட்பங்கள் மாறினாலும் மொழியின் எழில் கொஞ்சமும் குறையாமல் இருப்பதையும் பாடலில் வெளிப் படுத்தியிருக்கிறேன். மொழிப் பற்று வேறு; மொழி வெறி வேறு. ஒரு மொழி மீதான காதல் - மற்ற மொழி மீதான கோபமாக மாறக்கூடாது என்பதையும் பாடலில் சொல்லியிருக்கிறேன். இப்படி உருவான இந்தப் பாடலை பெரும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் பார்க்கிறேன்’’ என்றார் உற்சாகமாக.
இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு செப்டம்பர் 16 அன்று (நாளை) தொடங்கும் ‘யாதும் தமிழே’ 2-ம் நாள் விழாவின் காலை அமர்வாக நடைபெறும் ‘தலைமுறைகள் பேசும் தமிழ்’ கலந்துரையாடலில், தமிழ்மொழி கடந்து வந்த பாதை, இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் எப்படி இருக்கிறது? இனி வரப்போகும் தலைமுறைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியெல்லாம் பேசுகிறார் மதன் கார்க்கி.
அதே மேடையில் தமிழின் உச்சம் தொட்டு உத்வேகம் சேர்க்கப்போகிறது கவிப்பேரரசு வைரமுத்துவின் மின்னல் மணித்துளிகள். அனைவரும் வாருங்கள்... ‘யாதும் தமிழே’ விழாவில் சந்திப்போம்!
விவரங்களுக்கு: www.yaadhumthamizhe.com
பதிவுக்கு: SMS,THYT
Your Age
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT