Published : 30 Apr 2023 06:19 PM
Last Updated : 30 Apr 2023 06:19 PM
மதுரை: தமிழக முதல்வரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அருகே சத்திரப்பட்டியில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கிழக்குத்தொகுதி சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி சத்திரப்பட்டியில் நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டிருந்தது. தொகுதிக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பதிவு பெற்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்டு காளைகளுக்கான அனுமதிச்சீட்டு கியூஆர் கோடு முறையில் வழங்கப்பட்டது. இதற்கான டோக்கன்களை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் தொடங்கியது. போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சிவசங்கர், மெய்யநாதன், மா.சுப்பிரமணியன், மதுரை எம்பி சு.வெங்கடேசன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், எம்எல்ஏக்கள் கோ. தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அடங்க மறுத்த காளைகளுக்கும், அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கார், புல்லட், பைக், மோட்டார் சைக்கிள் என 6 மெகா பரிசுகளும், சிறப்பாக விளையாடும் காளைகளின் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு 1 கிராம் தங்க நாணயம், கலர் டிவி, சைக்கிள் ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி முதன்முறையாக பெண் வர்ணனையாளர்கள் மூலம் வர்ணனை செய்யப்பட்டது. பட்டிமன்ற பேச்சாளர் கோவில்பட்டி அன்னபாரதி, மண்வாசனை யூடியூப்பர் செல்வி லாவண்யா ஆகியோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT