Published : 30 Apr 2023 05:58 AM
Last Updated : 30 Apr 2023 05:58 AM

தமிழகத்தில் முதன்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதல்முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக `தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு' சென்னைகிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்.

முன்னதாக, பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

2023-24-ம் ஆண்டுக்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வளர்வதற்கு ஏதுவாக உள்ளன. எனவே, மருத்துவத் துறை தொழில்முனைவோருடன் இணைந்து, சென்னையில் சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த 2 நாள் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடைபெறுகிறது.

இதில், வங்கதேசம், நேபாளம், சவுதி அரேபியா, ஓமன், மியான்மர், இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த, 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள 120 தனியார் மருத்துவமனைகளிலிருந்து பிரபல மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனப் பிரதிநிதிகள், சித்தா,யோகா, ஆயுஷ் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளின் மருத்துவர்கள் உள்ளிட்ட 350 பேர் பங்கேற்றுள்ளனர். இதில், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மாநாடு தொடக்க விழாவில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன்,கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், த.மனோ தங்கராஜ், சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், சுற்றுலாத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் ச.உமா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு நிர்வாகிகள், உயர் சிறப்பு மருத்துவமனைகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இன்றும் (ஏப். 30) இந்த மாநாடு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x