Published : 29 Apr 2023 02:05 PM
Last Updated : 29 Apr 2023 02:05 PM

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த தமிழகத்தின் முதல் ‘மருத்துவச் சுற்றுலா மாநாடு’ - சிறப்பு அம்சங்கள்

தமிழக மருத்துவ சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழக மருத்துவ சுற்றுலா மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.4.2023) சென்னையில், தமிழக அரசின் சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில், தமிழகத்தில் முதல் முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழக மருத்துவச் சுற்றுலா மாநாட்டினை தொடங்கி வைத்து, “Tamil Nadu – Where the world comes to heal” என்ற தமிழகத்தில், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals & Healthcare Providers - NABH) அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். மேலும், இம்மாநாட்டில், பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

2023-24-ம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், “தமிழகத்தில் வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலாப் பிரிவில் மருத்துவ சுற்றுலாவும் ஒன்றாகும். தமிழகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், மருத்துவ சுற்றுலாவிற்கான தலமாக வளர்வதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. மருத்துவச் சுற்றுலாவிற்கான சிறந்த தலமாக தமிழகத்தினை அடையாளப்படுத்த மருத்துவத் துறையில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும். இம்மாநாடு உடல்நலம் பேணும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அரங்கங்கள், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடத்தவும் ஒரு சிறந்த தளமாக அமையும்” என்று அறிவிக்கப்பட்டது.

திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலையில் மருத்துவச் சேவைகளை அளிப்பதன் மூலம், சுகாதாரத் தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு உட்கட்டமைப்பானது, சிறந்த மருத்துவ நடைமுறைகளைக் கையாளுவதற்கு உதவிகரமாக விளங்குவதால் மருத்துவ சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

தமிழக சுற்றுலாத் துறையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து தமிழகத்தில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்திடவும், தமிழகத்தை முன்னணி மருத்துவ சுற்றுலாத் தலமாக மாற்றவும் இம்மாநாடு முக்கியப் பங்காற்றும். இம்மாநாட்டில் பங்களாதேஷ், நேபாளம், சவுதி அரேபியா, ஓமான், மியாமர், ஸ்ரீலங்கா, மொரிசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும், இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் 120 தனியார் மருத்துமனைகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் பிரபலமான மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சித்தா, யோகா, ஆயுஷ் துறைகளின் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் என 350 பேர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x