Published : 29 Apr 2023 08:46 AM
Last Updated : 29 Apr 2023 08:46 AM

'இபிஎஸ் உடன் பிரச்சினை இல்லை' - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை மற்றும் இபிஎஸ்

பெங்களூரு: ‘‘தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை’’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகா தேர்தலையொட்டி ஷிமோகாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான‌ அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அங்குள்ள தமிழர்கள் அதிகளவில் கலந்துகொண்டதால் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு கூறினார். மேலும் கன்னட நாட்டின் வாழ்த்துப் பாடலை ஒலிக்க செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இதற்கு கோலார் தங்கவயல் தமிழ்ச்சங்க தலைவர் கலையரசன், கர்நாடக திமுக அமைப்பாளர் ராமசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சரியான முறையில் ஒலிக்க செய்யவில்லை. கர்நாடகாவில் கன்னட மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கன்னட நாட்டின் மொழி வாழ்த்து பாடலை பாடியதில் எந்த தவறும் இல்லை. இதை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நான் அரசியலுக்கு வந்த நாளில் இருந்தே இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பொதுவான எதிரியான திமுகவை எதிர்த்து இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x