Published : 29 Apr 2023 05:30 AM
Last Updated : 29 Apr 2023 05:30 AM
சென்னை: கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கனிமொழி, ராமதாஸ், வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்துபாடலை பாதியில் நிறுத்தச் செய்ததுடன், கன்னடமொழி வாழ்த்தை இசைக்கச் செய்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது ட்விட்டர்பதில், “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கர்நாடக மாநிலம் சிவமோகாவில் தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில்தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நிகழ்ச்சிநடந்தாலும் அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் தமிழர்கள். அத்தகைய மாநாட்டில் தமிழ்த்தாய்வாழ்த்து ஒலிக்கச் செய்யப்படு வதுதான் முறையாகும்.
கன்னடமொழி வெறியராக அறியப்பட்ட ஈஸ்வரப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவரது கடமை. ஆனால், மேடைநாகரிகம்கூட இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதன் மூலம் தமிழ்த்தாயை இழிவுபடுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, ஈஸ்வரப்பா திடீரென்று குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அதோடு கன்னட மொழி பாடலையும் இசைக்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் மொழியை இழிவு செய்யும் வகையிலும், தமிழர் - கன்னடர் பகையை வளர்க்கும் வகையிலும் தேச ஒற்றுமையை சிதைக்கும் வகையிலும் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்ட ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும், பாஜக நிர்வாகிகளும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அண்ணாமலை பதில்: இதற்கிடையே இப்பிரச்சினை குறித்து அண்ணாமலை கூறியுள்ளதாவது: அடித்துக் கொண்டு புரள அதுதிமுக மேடை இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அதைத்தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்கவேண்டும் என்று தெரியாத ஒருதலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?
‘கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்’ என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநிலபிரிவினையை விதைத்த சரித்திரம்அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும், திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. இவ்வாறு அண்ணாமலை தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT