Published : 29 Apr 2023 06:32 AM
Last Updated : 29 Apr 2023 06:32 AM
சென்னை: தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம்ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா கைப்பற்றப்பட்டது.
அப்போது தமிழக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு உயரதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப்படும் டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டபலர் ஊழல் சர்ச்சையில் சிக்கினர்.
இந்த வழக்கில் இதுவரை மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணபாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு தமிழக அரசு கடந்த ஜூலையில் அனுமதி வழங் கியது.
அதேபோல், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னைகாவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியஇருவரும் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதால், அவர்கள் மீது வழக்குதொடரவும், விசாரணை நடத்தவும்மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசுசிபிஐ-க்கு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜார்ஜ் மற்றும் டி.கே.ராஜேந்திரன் மீது வழக்கு தொடர்ந்து, விசாரணை நடத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறைஅமைச்சகத்துக்கு சிபிஐ சார்பில்அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.
ஆனால், அந்த அனுமதி கடிதம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் தற்போது பணியில் உள்ள 2 எஸ்பிக்கள் உட்பட மேலும் சில போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குட்காவிவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT