Published : 29 Apr 2023 06:16 AM
Last Updated : 29 Apr 2023 06:16 AM

தலைமைக்கு ‘தலைவலி’ ஏற்படுத்தும் மதுரை திமுக கவுன்சிலர்கள்: அமைச்சர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை!

பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தளபதி, மணிமாறன், இந்திராணி

மதுரை: மதுரை மாநகராட்சியில் பல்வேறு கோஷ்டிகளாக செயல்படும் திமுக கவுன்சிலர்களை உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செயலா ளர்களால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.

திமுகவை சேர்ந்த மேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களிடையே நீடிக்கும் கோஷ்டி பூசலால் மாநகராட்சி அதி காரிகள் யார் பேச்சை கேட்பது? என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் திமுகவுக்கு 70 கவுன்சிலர்கள் உள்ளனர். மேயர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுக கவுன்சிலர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு அப்பதவியை பெற உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மூலம் பெரும் முயற்சி செய்தனர்.

ஆனால், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது தீவிர ஆதரவாளரான பொன்வசந்த் மனைவி இந்திராணியை மேயர் பொறுப்புக்குக் கொண்டு வந்தார். மற்ற திமுக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தாலும் கட்சி மேலிடம் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக இருந்தது.

அதனால் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பொன் முத்துராமலிங்கம் போன்றோர் எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல், ஆதரவும் கொடுக்க முடியாமல் தற்போது வரை அதிருப்தியில் உள்ளனர்.

இவர்கள் ஆதரவு கவுன்சிலர்களும், மாநகராட்சியில் தனித்தனி அணியாகவே செயல்படுகின்றனர். ஆனால் இவர்கள் மேயரையும், அவர் கொண்டு வரும் தீர்மானங்களையும் எதிர்ப்பதில் மட்டும் ஒரே அணியாகி விடுகின்றனர். கடைசியாக நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கூட திமுக கவுன்சிலர்கள் ரகளையால் மேயர் கூட்டத்தை நடத்த முடியாமல் காவல்துறையினரை கூட்டரங்குக்கு வரவழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கட்சி மேலிடம் அந்த சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை.

இதுவரை மாநகராட்சி மைய அலுவலகம் வரை நீடித்த திமுக கோஷ்டிப்பூசல், தற் போது மண்டல அலுவலக அளவில் பரவத் தொடங்கி உள்ளது. மண்டலத் தலை வருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அங்கும் திமுக கவுன்சிலர்கள் தனித்தனி அணியாக செயல்படத் தொடங்கிவிட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் மேயர் பேச்சை கேட்பதா, மண்டலத் தலைவர், கவுன்சிலர்கள் பேச்சை கேட்பதா? என தவிக்கின்றனர்.

ஒவ்வொரு திமுக வார்டிலும் இப்பிரச் சினை நீடிக்கிறது. இதனால் மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சவால்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்விக்கும், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட 54-வது வார்டு திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் வெடித் துள்ளது.

இந்த விவகாரத்தில் பாண்டிச்செல்விக்கு ஆதரவாக அவரது கணவர் மிசா பாண் டியன், கவுன்சிலர் நூர்ஜஹானை மிரட்டி யதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் மாநகர் காவல் துறையில் புகார் செய்யும் அளவுக்கு கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளது. நேற்று மிசா பாண்டியன், செய்தியாளர்களை அழைத்து தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

அதேநேரத்தில் கவுன்சிலர் நூர்ஜஹான், தன்னை மக்கள் பிரச்சினைகளை பற்றி மாமன்றம், மண்டலக் கூட்டங்களில் பேச விடாமல் மண்டலத்தலைவரின் கணவர் தடுக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

மாநகராட்சியில் திமுக மேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களிடையே நீடிக் கும் கோஷ்டிப்பூசல், கட்சி மேலிடத் துக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இது வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

கோஷ்டிப் பூசலுக்கு காரணம்? - மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி கட்டுப்பாட்டில் கவுன்சிலர்கள் இல்லா ததால் அவராலும் கண்டிக்க முடியவில்லை. அதுபோல், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மேயர் ஆகியோர் கட்டுப்பாட்டிலும் கவுன்சிலர்கள் இல்லை.

ஒரு திமுக கவுன்சிலருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தால் மற்ற தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாநகராட்சியில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் கட்சி கவுன்சிலர்களை கூட மேயர், மண்டலத் தலைவர்கள் எளிதாகச் சமாளித்து நிர்வாகத்தை கொண்டு செல்ல முடிகிறது.

ஆனால், திமுக கவுன்சிலர்களை சமாளிக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் திணறுகிறார்கள். மேலும், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், குடும்பத்தினர் தலையீடும் நிர்வாகப் பணிகளில் அதிகரித்துள்ளது.

இதைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. திமுக கவுன்சிலர்கள் ஒரே அதிகாரத்தின் கீழ் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகத்தை மேயர், மண்டலத் தலைவர்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x