Published : 28 Apr 2023 07:20 PM
Last Updated : 28 Apr 2023 07:20 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் மல்லிகைப்பூ சீசன் தொடங்கியிருப்பதால் பூ மார்க்கெட்டுகளுக்கு அதன் வரத்து அதிகரித்துள்ளது. அதனால், மல்லிகைப்பூ நேற்று ரூ.300 முதல் ரூ.400 வரை விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மல்லிகைப் பூக்கள் பரவலாக விளைவிக்கப்பட்டாலும் மதுரை மல்லிகைக்கு தனி மனமும், நிறமும் உண்டு. அதனாலே, மற்ற ஊர் மல்லிகைப் பூக்களில் இருந்து மதுரை மல்லிகைப்பூ சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மதுரையில் விளையும் மல்லிகைப்பூ, வெளிநாடுகளில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதியாகிறது. அதுபோல், தமிழகத்தின் பிற மாவட்ட பூ மார்க்கெட்டுகளுக்கும் மதுரை மல்லிகைப்பூ விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படி, ஆண்டு முழுவதுமே உள்ளூர் சந்தை முதல் உலக சந்தைகள் வரை மதுரை மல்லிகைப் பூக்களுக்கு அதிக வரவேற்பு உண்டு.
உள்ளூர் சந்தைகளில் திருவிழா காலங்களில் மல்லிகை பூ விலை கடுமையாக உயரும். ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கூட விலை உயரும். மதுரை மாவட்டத்தில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி வட்டாரங்களில் அதிகளவு மல்லிகைச் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பொதுவாக மல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள் அதிகளவு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும். தற்போது மல்லிகைப்பூ சீசன் தொடங்கிவிட்டதால் மதுரை மாவட்ட பூ மார்க்கெட்டுகளில் மதுரை மல்லிகைப்பூக்கள் வரத்து அதிகமாக உள்ளது.
மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டை சேர்ந்த பூ வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ''இன்று மதுரை மல்லிகை ரூ.400 முதல் ரூ.300 விற்பனையாகிறது. பிச்சி ரூ.300, முல்லை ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.80, சம்பங்கி ரூ.50, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.100 விற்பனையாகிறது. மற்ற பூக்கள் விலையும் குறைவாகவே விற்கிறது. மல்லிகைப்பூ சீசன் என்பதால் தற்போது சந்தைகளுக்கு மல்லிகைப்பூ அதிகளவு வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 20 டன்னுக்கு மேலாக மதுரை மல்லிகை விற்பனைக்கு வந்ததால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT