Published : 28 Apr 2023 06:51 PM
Last Updated : 28 Apr 2023 06:51 PM
சென்னை: கர்நாடகத்தில் தமிழ் மொழிக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளதற்கு பாஜகவின் அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''கர்நாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழர்களே பெரும்பாலானவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார். கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, கர்நாடக மாநில பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா திடீரென்று குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அத்தோடு கன்னட மொழி பாடலையும் இசைக்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எவருக்கும் கன்னட மொழி தெரியவில்லை என்பதை அவர்களே வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்டச் சூழலில் அங்குள்ள தமிழ் மக்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பாவும், அவரது பாஜகவும் இழிவு செய்துள்ள போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைவர்கள் உள்ளம் குமுறி அறிக்கை வெளியிட்டதை அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக பொறுப்பில்லாமல் உளறிக் கொட்டி அறிக்கை என்ற பெயரில் தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்பது மட்டுமல்ல, உலகின் மூத்த மொழிகளில் ஒன்று, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி என்னும் வரலாறு அண்ணாமலைக்கும், ஈஸ்வரப்பாவுக்கும் அறவே தெரியாது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தமிழ்மொழியை இழிவு செய்யும் வகையிலும், தமிழர் - கன்னடர் பகையை வளர்க்கும் வகையிலும் தேச ஒற்றுமையை சிதைக்கும் வகையிலும் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் பா.ஜ.க. நிர்வாகிகளும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT