Published : 28 Apr 2023 06:45 PM
Last Updated : 28 Apr 2023 06:45 PM
சென்னை: டாஸ்மாக் நிறுவனம் சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Mall Shops திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொது மக்களால் அணுக முடியாது.
இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT