Published : 28 Apr 2023 01:24 PM
Last Updated : 28 Apr 2023 01:24 PM
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் மாதம் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க இருக்கிறார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை - கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, மறைந்த முன்னாள் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அறிவித்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை ஒட்டியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
முதல்வரின் அழைப்பினை குடியரசுத் தலைவர் ஜூன் மாதம் 5-ம் தேதி சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT