Published : 04 Sep 2017 11:30 AM
Last Updated : 04 Sep 2017 11:30 AM
தமிழகத்தில் பல ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் உள்ள நிலையில், ‘இதற்கு மேல் இடமில்லை; உங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேருங்கள்’ என மறுக்கும் அளவுக்கு நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நடப்பு கல்வியாண்டில் முதல் வகுப்பில் 83 மாணவர்கள் உட்பட 1 முதல் 5-ம் வகுப்பு வரை 153 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மொத்த மாணவர்கள் 281 பேர். இந்த ஆண்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு தொடக்கப் பள்ளி என்ற பெருமையை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. இந்த சாதனை ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு ஆண்டுகளிலோ நிகழ்த்தப்பட்டதல்ல. தலைமை ஆசிரியர் ரா.விஜயலலிதாவின் 15 ஆண்டு கால கடும் உழைப்பு மற்றும் பள்ளி ஆசிரியர்களின் விடா முயற்சி, திட்டமிட்ட கூட்டுப் பணி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
இது பற்றி தலைமை ஆசிரியர் ரா.விஜயலலிதா கூறியதாவது:
நான் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2002-ம் ஆண்டு பொறுப்பேற்றேன். அப்போது மாணவர் எண்ணிக்கை வெறும் 5 மட்டுமே. பலரும் இந்தப் பள்ளிக்கு வரத் தயங்கினர். எனது தாயார்தான் என்னை உற்சாகப்படுத்தி, இந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்கச் செய்தார். அப்போது பள்ளியில் ஒரு பழைய ஓட்டுக் கட்டிடம் மட்டுமே இருந்தது. முதலில் அந்த கட்டிடத்துக்கு வர்ணமடித்து அழகு பெறச் செய்தோம். நானும், இன்னொரு இடைநிலை ஆசிரியர் ஆகிய 2 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தோம். இருவரும் வீடு, வீடாகச் சென்று பெற்றோரைச் சந்தித்தோம். இந்த அரசுப் பள்ளியில் தரமான கல்வி போதிக்கப்படும் என உறுதியளித்தோம். இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. அந்த ஆண்டிலேயே 38 புதிய மாணவர்கள் சேர்ந்தனர். இது எங்களுக்கு பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. நான் பள்ளிக்கு சென்ற நேரத்தில் நான் உட்காருவதற்கு கூட ஒரு நாற்காலி கிடையாது. அந்த சூழலில் நன்கொடையாளர்கள் உதவியுடன் அனைத்து மாணவர்களுக்கும் இருக்கை வசதிகள் செய்து கொடுத்தோம். பள்ளிக்கூடத்துக்கான தோற்றத்தையும், வகுப்பறைக்கான சூழலையும் அந்த ஆண்டில் ஏற்படுத்தினோம். அந்த ஆண்டின் இறுதியில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு பள்ளி ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தினோம். அடுத்த ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது. அதேபோல் அடுத்தடுத்த ஆண்டுகளில் 90, 110, 140 என மாணவர் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.
2006-ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் நிதி கிடைத்தது. கூடுதலாக நான் ரூ.1 லட்சமும், எனது கணவர் ரூ.1 லட்சமும் வழங்கினோம். புதிய கட்டிட தரைகளில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டன. சுவரோவியங்கள் வரைந்து வகுப்பறைகளை அழகுபடுத்தினோம். 2014-ல் இன்னொரு கட்டிடம் கட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ரூ.13 லட்சத்து 50 ஆயிரமும், நன்கொடையாளர்கள் மூலம் ரூ.6 லட்சமும் கிடைத்தது. புதிய கட்டிடத்தில் வகுப்பறைகள் தவிர, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கம்ப்யூட்டர் அறை உருவாக்கினோம். ஆயிரம் புத்தகங்களுடன் நூலகம் ஏற்படுத்தினோம்.
இவ்வாறு பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்திய அதே நேரத்தில், மாணவர்களின் கற்றல் திறன்களை அதிகப்படுத்த திட்டமிட்டு பணியாற்றினோம். செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி தொடர்பாக ஆசிரியர்கள் பெற்ற பயிற்சி முழுவதையும் வகுப்பறைகளில் முழுமையாக செயல்படுத்தினோம். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கினோம். இப்போது எல்லா வகுப்புகளுக்கும் ஆங்கில வழிக் கல்வி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 3 வரையிலான வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே வழங்கப்படுகிறது. எங்கள் பள்ளியின் மாணவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக எழுதவும், வாசிக்கவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய பலவித முயற்சிகளின் காரணமாக கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 281-யை தொட்டது. இந்த ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் 83 பேர் உட்பட மொத்தம் 153 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது மொத்தம் 351 மாணவர்கள் எங்கள் பள்ளியில் பயில்கிறார்கள். அதேபோல் இரண்டு பேர் மட்டுமே பணியாற்றிய இந்தப் பள்ளியில் தற்போது ஆசிரியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 7 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்கள். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியாற்றும் 5 ஆசிரியர்களையும் சேர்த்து மொத்தம் 15 ஆசிரியர்கள் தற்போது பணியாற்றுகிறோம்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், நன்கொடையாளர்கள், கல்வித் துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் பலனாக இன்று எங்கள் பள்ளி கரூர் மாவட்டத்திலயே முன்மாதிரிப் பள்ளியாக உயர்ந்திருக்கிறது. எனினும் பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதற்கு மேலும் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளியில் சேர விரும்பிய ஏராளமான மாணவர்களை சேர்க்க முடியவில்லை.
எங்கள் பள்ளிக்கு தற்போது 12 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து கூட ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர். கூடுதல் இடவசதி கிடைத்தால், இந்த அரசு தொடக்கப் பள்ளியில் 500 பேருக்கும் அதிகமாகக் கூட மாணவர்களை சேர்க்க முடியும்.
இவ்வாறு மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர் விஜயலலிதா.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் உழைத்தால் எவ்வளவு மோசமான பள்ளியையும் முன்மாதிரியான, ஆச்சரியமானப் பள்ளியாக உயர்த்திக் காட்ட முடியும் என்பதற்கு நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உதாரணமாக திகழ்கிறது.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 87780 95302
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT