Published : 28 Apr 2023 04:23 AM
Last Updated : 28 Apr 2023 04:23 AM

மக்களின் தேவையறிந்து செயல்படுங்கள் - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற 'கள ஆய்வில் முதல்வர்' திட்ட ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்டோர்.

விழுப்புரம்: அரசு அதிகாரிகள் மக்களுடன் பழகி, அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற `கள ஆய்வில் முதல்வர்' ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

`கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தலைமைச் செயலகத்தில் அமர்ந்து திட்டங்களைத் தீட்டினால் போதும், பணிகள் தானாக நடைபெற்று விடும் என்று கருதாமல், மக்களுக்கு நெருக்கமாகச் சென்று, அரசால் வகுக்கப்பட்ட திட்டங்களின் செயலாக்கத்தை கள அளவில் கண்காணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்` கள ஆய்வில் முதல்வர்' திட்டம் தொடங்கப்பட்டது.

இதுவரை வேலூர், சேலம், மதுரை ஆகிய 3 இடங்களில், 14 மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தியுள்ளேன்.

நமது மாவட்டத்துக்கு முதல்வர் வந்தால், இதையெல்லாம் கேட்பார் என்று கருதி, சில திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர். இதை நான் குறையாகச் சொல்லவில்லை. துரிதமான நடவடிக்கையாகவே பார்க்கிறேன். இந்த திட்டத்தால் ஏற்படும் பயனாகவே இதைக் கருதுகிறேன்.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம் விரைந்து தொடங்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதே, உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பதாகும்.

புதிய சிறு, குறுந் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்களை, குறிப்பாக, தாட்கோ நிதியுதவி, வங்கிக் கடன், நீட்ஸ் - வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் இருந்தது தெரியவந்தது. தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும்.

மக்களோடு பழகி, அவர்களது தேவையை அறிந்து செயல்படுங்கள். பொதுமக்களின் பாராட்டைப் பெறும் அளவுக்கு உங்கள் பணி அமைய வேண்டும்.

அரசின் உத்தரவுகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல், நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களை அரசிடம் தெரிவித்து, உரிய முன்மொழிவுகளை அனுப்புங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணே சன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறைச் செயலர்கள் சிவ்தாஸ் மீனா, எஸ்.கே.பிரபாகர், ஜெ.ராதாகிருஷ்ணன், குமார் ஜெயந்த், காகர்லா உஷா, ஹர் சஹாய் மீனா, சி.விஜயராஜ் குமார், மாவட்ட ஆட்சியர்கள் சி.பழனி (விழுப்புரம்), கி.பால சுப்பிரமணியம் (கடலூர்), ஷ்ர வன் குமார் ஜடாவத் (கள்ளக் குறிச்சி) மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x