Published : 28 Apr 2023 05:44 AM
Last Updated : 28 Apr 2023 05:44 AM
சென்னை: தேர்தல் பணிகளைத் தொடங்க ஏதுவாக, பாஜகவுக்கான தொகுதிகளை விரைந்து முடிவு செய்யுமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக டெல்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர்.
அதேபோல, பழனிசாமியுடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோரும் சென்றனர்.
கட்சிகளின் பலம்: மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக கூட்டணியை வலுப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு, தேமுதிக, பாமக கட்சிகளின் தற்போதைய பலம், திமுக கூட்டணிக் கட்சிகளின் பலம் உள்ளிட்டவை குறித்து பழனிசாமியிடம், அமித் ஷா கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக போட்டியிட சில தொகுதிகளைத் தேர்வு செய்திருப்பதாகவும், அந்தத் தொகுதிகளில் யாரை நிறுத்தலாம் என்ற வரைவுத் திட்டத்தை தயாரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், தென்காசி, கோவை, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், முன்கூட்டியே தொகுதி முடிவு செய்யப்பட்டால், பாஜகவினர் தேர்தல் பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும் என்றும் அமித் ஷா கூறியதாகவும், கட்சித் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆட்சிமன்றக் குழுவுடன் கலந்து ஆலோசித்து, உரிய முடிவு தெரிவிப்பதாக பழனிசாமி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமர்சனங்கள் வேண்டாம்: தொடர்ந்து, தமிழகத்தில் அதிமுகவுக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தைப் போர் நடைபெற்று வந்ததை அறிந்திருக்கும் அமித் ஷா, இரு தரப்பினரும் மக்களவை தேர்தல் வெற்றி, பொது எதிரியை வீழ்த்துவதை நோக்கி பயணிக்க வேண்டும். கருத்து மோதல்கள் மற்றும் எதிர் விமர்சனங்களை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பழனிசாமியிடம் அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், அண்ணாமலை முக்கியமானவர் என்பதை அதிமுகவினருக்கு உணர்த்தும் வகையில், இந்த சந்திப்பில் வழக்கத்துக்கு மாறாக அண்ணாமலையை பங்கேற்கச் செய்ததாகவும், அண்ணாமலையை அதிகம் விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, இந்த சந்திப்பின்போது அண்ணாமலைக்கு அருகில் அமரவைத்து ஜெயக்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT